மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயீப் அலிகான் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார்.
இதனால் படுகாயம் அடைந்த சயிப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததாகவும், முதுகு தண்டில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் முதுகெலும்பு திரவம் கசிந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நடிகர் சயிப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
சிகிச்சை முடிந்து நடிகர் சயிப் அலிகான் வீடு திரும்பிய காட்சியை பார்த்த பலரும், அவர் இவ்வளவு விரைவாக குணமடைந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பினர். குறிப்பாக முதுகு தண்டில் காயம் ஏற்பட்ட நிலையில், சயிப் அலிகான் எவ்வாறு இப்படி இயல்பாக நடந்து செல்கிறார்? என சில மருத்துவர்களே தங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சயிப் அலிகான் மீது உண்மையிலேயே கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது அவர் நடிக்கிறாரா? என்று மராட்டிய மந்திரி நிதிஷ் ரானே கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சயிப் அலிகான் விரைவாக குணமடைந்தது எப்படி? என்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தி என்பவர் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 78 வயதான தனது தாயார், முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அதே நாளில் எழுந்து நடக்க முயற்சி செய்யும் வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில், "சயிப் அலிகானுக்கு முதுகெலும்பில் திரவக் கசிவும், முதுகு தண்டை சுற்றியிருக்கும் சவ்வுப்பகுதியில் சிறிய சேதமும் ஏற்பட்டுள்ளது. எனது தாயாருக்கு முதுது தண்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. அவர் அறுவை சிகிச்சை முடிந்து அடுத்த நாளே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இளமையாகவும், திடமாகவும் இருப்பவர்கள் இன்னும் வேகமாகவே குணமடைவார்கள்.
இப்போதெல்லாம், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் அடுத்த 3 நாட்களில் நடக்கிறார்கள், படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள். சமூக ஊடகங்களில் உங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதற்கு முன்பு, தயவுசெய்து நிபுணர்களிடம் பேசுங்கள், படித்து கற்றுக்கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.