சென்னை,
தமிழ் சினிமாவில் வில்லன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் சத்யராஜ். கோவை மாவட்டத்தில் பிறந்த சத்யராஜ், தமிழ் சினிமாவில் 1978-ம் ஆண்டு 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படத்தில் முதல்முறையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார்.
அதனை தொடர்ந்து சின்ன சின்ன துணை வேடங்களில் பல படங்களில் நடித்தார். பின்னர், 1985-ல் கார்த்திக் ரகுநாதன் இயக்கிய 'சாவி' திரைப்படத்தில் முதல் முறையாகக் கதாநாயகனாக அறிமுகமானார். அதில் தனது நடிப்பு திறைமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் சத்யராஜ். தற்போது வில்லனாகவும், கதாநாயகனாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார்.
இவர் தற்போது, ரஜினிகாந்தின் 171-வது படமான 'கூலி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சத்யராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இது குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் 'ராஜசேகர்' என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்தநிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'கூலி' படத்தின் படப்பிடிப்பின் போது சத்யராஜுடன் அமர்ந்து பேசும் புகைப்படம் ஒன்றை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "கூலி படத்தில் உங்களுடன் பணிபுரிவது உண்மையிலேயே ஒரு பாராட்டுக்குரிய அனுபவமாக இருந்தது, அது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது, மேலும் தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி, உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.