சென்னை,
1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன. அடுத்ததாக பாலாவின் வணங்கான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
தற்போது, கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஏற்கனவே இவர் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இதனை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இதற்கு இசையமைக்கிறார்.
'ரெட்ட தல' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததையொட்டி நடிகர் அருண் விஜய் படக்குழுவினருக்கு அசைவ விருந்தளித்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு 'ரெட்ட தல' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.