சென்னை: சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாக கூட்டரங்கில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: வணிகவரி துறையில் கடந்த 2023-24 நிதி ஆண்டின் 2024 ஜனவரி 31ம் தேதி வரையிலான வருவாய் ரூ. 1.01,234 கோடியாகும். தற்போதைய 2024-25 நிதியாண்டின் 2025 ஜன.31ம் தேதி வரை ஈட்டப்பட்ட வருவாய் ரூ. 1,13,235 கோடியாகும். இது கடந்த நிதியாண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் ரூ.12,001 கோடி வருவாய் கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளது.
மேலும் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கடந்த 2017-18, 2018-19 மற்றும் 2019-20 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட வரிவிதிப்பாணைகளில் எழுப்பப்பட்ட கேட்புகளில் நிலுவையிலுள்ள வரித்தொகையை 2025 மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் நிலுவையிலுள்ள வட்டி மற்றும் தண்டத்தொகை தள்ளுபடி செய்யப்படுவதற்கான திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுறுத்தலின் படி நடைமுறையில் உள்ளது.
எனவே மேற்கண்ட வருடங்களுக்கு வரி நிலுவை பாக்கி வைத்துள்ள சம்பந்தப்பட்ட வணிகர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி, வரியை செலுத்தி, பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வட்டி மற்றும் தண்டத்தொகை செலுத்துவதிலிருந்து தள்ளுபடி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் குமார் ஜயந்த், வணிகவரித்துறை ஆணையர் டி. ஜகந்நாதன், இணை ஆணையர் (நிர்வாகம்) பூங்கொடி மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post நடப்பு நிதியாண்டில் வணிகவரித்துறையில் 1.13 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது: அமைச்சர் மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.