டெல்லி: திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் என்கிற ஜானி பாஷாவுக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தின் ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பாலியல் குற்றச்சாட்டு புகாரில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய விருது பெறுவதற்காக ஜாமீன் கோரிய ஜானிக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருதை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் ஜானி. இவரது குழுவில் உள்ள 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பலாத்காரம் செய்தார் என புகார் கூறினார். இந்த புகாரின் பேரில் ஜானி மாஸ்டர் மீது ஐதராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தெலுங்கு பிலிம் சேம்பரும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டது. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோல் ஜானி மாஸ்டர் மீது புகார் கூறப்பட்டது. அவர் கைதும் செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் மீது மீண்டும் புகார் எழுந்தது. புகார் கூறிய அந்த பெண், 2019ம் ஆண்டிலேயே ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறப்படுகிறது. மைனர் பெண்ணை எப்படி பணியில் அமர்த்தப்பட்டார் என்ற ரீதியிலும் விசாரணை நடப்பதாக பிலிம்சேம்பர் வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து கோவாவில் பதுங்கியிருந்த ஜானி மாஸ்டரை இன்று காலை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. தேசிய விருது வழங்கும் விழா வரும் 8ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தற்போது சிறையில் உள்ள ஜானி மாஸ்டர், தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், கலந்து கொள்வதற்காக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இன்று முதல் 10ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருதை ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து appeared first on Dinakaran.