சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருச்சங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) பேசுகையில், ‘காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு நடந்தாய் வாழி காவிரி திட்டம் தீட்டப்பட்டது. 934 கோடி ரூபாயில் 60 சதவீதம் ஒன்றிய அரசினுடைய பங்கு, 40 சதவீதம் மாநில அரசினுடைய பங்கு. ஆனால், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஷ்வரன், ஒன்றிய அமைச்சருக்கு கேள்வி எழுப்பியபோது ஒன்றிய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்திருக்கின்றார். மாநில அரசின் முன்னெடுப்பு இல்லை. ஒத்துழைப்பு இல்லை என்கிற விதத்திலே அவர் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். மாநில அரசினுடைய நிலை என்ன? என்றார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், நடந்தாய் வாழி காவிரி திட்டம், காவிரி மற்றும் அதன் 5 கிளை ஆறுகள் திருமணிமுத்தாறு, சரபங்கா, பவானி, அமராவதி, நொய்யல் மாசுபடுவதிலிருந்து பாதுகாத்தல், புத்துயிர்பெறச் செய்தல், நீர் ஆதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தினுடைய நோக்கம். இத்திட்டத்தினை கட்டம்-1 காவிரி ஆறு மேட்டூரிலிருந்து திருச்சி வரையில் மற்றும் அதன் ஐந்து கிளை ஆறுகள். கட்டம்-2, காவிரி ஆறு திருச்சியிலிருந்து, கடல் முகத்துவாரம் வரையில் எனவும் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது.
கட்டம்-1 மொத்த மதிப்பீடு ரூ.934.301 கோடி. ஒன்றிய அரசின் பங்கு 60 சதவீதம். அதாவது, ரூ.560.581 கோடி, மாநில அரசின் பங்கு 40 சதவிகிதம் ரூ.373.72 கோடி. இந்த நிதியை பெறுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.
எம்.ஜி.ஆர். பாட்டு பாடிய எ.வ.வேலு
பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘முதல்வர் சுற்றுபயணம் செல்லும் இடங்களில் தாய்மார்கள் அவர் கையில் குழந்தையை கொடுத்து முத்தம் கொடுக்கச் சொல்கிறார்கள். கையில் கொடுக்கச் சொல்கிறார்கள், அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். முதல்வர் அந்தக் குழந்தையைப் பார்க்கிறபோது அரசிளங்குமரில் எம்ஜிஆர் பாட்டுதான் என் நினைவுக்கு வந்தது என்று கூறிவிட்டு, ‘சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா..’ பாடலை ராகத்துடன் அமைச்சர் எ.வ.வேலு பாடினார்.
The post நடந்தாய் வாழி காவிரி திட்ட நிதியை பெற திட்ட அறிக்கை: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.