சிங்பூம்: ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டம் கெரிபுரு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது மின்னல் தாக்கியதில் மத்திய ரிசர்வ் காவல் படை அதிகாரி (சிஆர்பிஎப் ) எம்.பிரபோ சிங் என்பவர் உயிரிழந்தார்; மற்றொருவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘26வது பட்டாலியன் படைப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலை கமாண்டரான எம்.பிரபோ சிங், மணிப்பூரின் மேற்கு இம்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
நக்சல் வேட்டையின் போது வனப்பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். காயமடைந்த உதவி கமாண்டன்ட் எஸ்.கே.மண்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த துயர சம்பவம் குறித்து மத்திய ரிசர்வ் படையினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரி பிரபோ சிங்கின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர். முன்னதாக 2024 செப்டம்பரில், சட்டீஸ்கரின் தந்தேவாடாவில் உள்ள பர்சூர் பயிற்சி மையத்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நக்சல் தேடுதல் வேட்டையின் போது மின்னல் தாக்கியதில் சிஆர்பிஎப் அதிகாரி பலி: ஜார்கண்டில் சோகம் appeared first on Dinakaran.