
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தங்க நகைக்கடன் பெறுவதற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் ரிசர்வ் வங்கி - ஏழை, எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அவசரகால நேரத்தில் பேருதவியாக இருக்கும் நகைக்கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும்.
தங்க நகைக்கடன் வழங்குவதில் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க தங்க நகைக்கான கடன் அளவு 75 சதவிகிதமாக குறைப்பு, சொந்த நகை என்பதற்கான உரிய ஆதாரம், 22 கேரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள், வணிகர்கள், சிறு,குறு நடுத்தர தொழில்துறையினர் தங்களின் அவசரத் தேவைக்காக தங்க நகைகளை அடகு வைப்பதும், பின்னர் படிப்படியாக பணம் கட்டி திருப்பிக் கொள்வதும் வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் அவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான வேளாண்குடி மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலம் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தங்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமைந்திருப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, தங்க நகைக்கடன் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இக்கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கி முன்வர வேண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.