ஓசூர், ஜன.22: ஓசூர் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நான்கரை பவுன் நகை திருடிச் சென்ற 2 பெண்கள் உள்பட 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூரில் ராம்லால் (40) என்பவர் நகை கடை வைத்துள்ளார். கடந்த 19ம் தேதி மதியம் 12 மணியளவில், இவரது கடைக்கு வந்த 2 பெண்கள் மற்றும் ஒரு ஆண், தேவையான நகைகளை வாங்கிக்கொண்டு, அதற்கான பணத்தை செலுத்தி விட்டு சென்றனர். அன்றிரவு கடையில் உள்ள நகைகளின் இருப்பு குறித்து, வழக்கம் போல ஆய்வு செய்த போது, 36 கிராம் (நான்கரை பவுன்) நகைகள் குறைந்துள்ளதை கண்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து கடையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, நகை வாங்க வந்த பெண்கள் உள்ளிட்ட 3 பேரும், வாங்கிய நகைக்கான பணத்தை செலுத்தும் போது,
வேறு சில நகைகளை எடுத்து காண்பிக்க சொல்லி, அதை பார்ப்பதை போல், கடையின் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளனர். அந்த நேரத்தில், ஏற்கனவே அவர்கள் கொண்டு வந்திருந்த எடை குறைவான சில நகைகளை, அந்த பெட்டிகளில் வைத்து விட்டு, எடை அதிகம் உள்ள நகைகளை நைசாக திருடியது, சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இது குறித்து ராம்லால், பாகலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவியில் பதிவான 3பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நகை கடையில் நூதனமாக நான்கரை பவுன் திருட்டு appeared first on Dinakaran.