திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சியுடன் சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, திருப்பாச்சூர், சிறுவானூர், மேல்நல்லாத்தூர், வெங்கத்தூர் மற்றும் புட்லூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவானூர் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது, அவ்வாறு இணைத்தால் எங்களுக்கு 100 நாள் வேலை கிடைக்காது, வரி விதிப்பும் அதிகரித்துவிடும் என்று கூறி சிறுவானூர் ஊராட்சியாகவே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் குடிநீர் வரி, வீட்டு வரி, சாலை வரி என அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டு நாங்கள் அவதிக்குள்ளாக்கப்படுவோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி நேற்று சிறுவானூர் பகுதியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான சிறுவானூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து கோஷம் எழுப்பியபடி சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இரண்டு புறமும் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
The post நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.