தோஷங்கள் போக்கும் ஸ்ரீமுஷ்ணம் சப்த கன்னியர்

2 weeks ago 3

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பூவராகசாமி கோவிலில் சப்த கன்னிகள் சன்னதி அமைந்துள்ளது.

பூவராகசாமியாகிய பெருமாள் பன்றி அவதாரம் எடுத்து இரணியனை அழித்த தலம் தான் ஸ்ரீமுஷ்ணம். இரணியன் 4 வேதங்களையும் எடுத்து சென்று ஒளித்து வைத்து பூமியையும் இருட்டாக செய்து விட்டு பூமிக்கு அடியில் நுழைந்து கொண்டான். இதனால் மக்கள் பெரும் கஷ்டப்பட்டனர்.

இந்த பகுதியில் வாழ்ந்த 'அம்புஜவல்லி தாயாரும். அவருடைய தோழிகளான சப்த கன்னிகளும் மக்களும் பெருமாளிடம் இரணியனை அழித்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள். எனவே பெருமாள் பன்றி அவதாரம் எடுத்து மண்ணுக்குள் நுழைந்து சென்று இரணியனை கொன்றார். பின்னர் அம்புஜவல்லி தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அம்புஜவல்லி தாயார் தனது தோழிகளையும் தன்னுடனேயே வைத்துக் கொள்ள விரும்பி பெருமாளிடம் வேண்டினார். இதை ஏற்றுக்கொண்ட பெருமாள் தனது கோவிலிலேயே அவர்களுக்கு இடமளித்தார். அத்துடன் அவர்களுக்கு தோஷங்களை போக்குதல், குழந்தைவரம் தருதல் போன்ற சக்திகளையும் அளித்தார்.

அதன்படி 7 சப்த கன்னியர்களும் இந்த கோவிலில் இடம்பிடித்தனர். அவர்கள் வடக்கு நோக்கி அமர்ந்தபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்கள். இந்த சப்த கன்னிகளுக்கு விசேஷ சக்திகள் இருப்பதாக நம்பிக்கை உள்ளது. எந்த தோஷமாக இருந்தாலும் இங்கு வந்து வணங்கினால் நொடிப்பொழுதில் விலகி விடும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

குழந்தை இல்லாத தம்பதியினர் இங்கு வந்து சப்தகன்னியரை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால், குழந்தை இல்லாத தம்பதியினர் பலர் வழிபட்டு செல்கின்றனர். குழந்தை வரம் கொடுப்பதால் அவர்களை குழந்தையம்மாள் என்று அழைக்கிறார்கள்.

சப்தகன்னியரை செங்குந்த இன மக்கள் குலதெய்வமாகவும் வழிபடுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 10 நாட்கள் உற்சவ விழா நடத்துகிறார்கள். அப்போது பல்வேறு மாறு வேடங்களை அணிந்து வந்து ஆடிப்பாடி வழிபாடு செய்கின்றனர். இப்படி செய்தால் தங்கள் குறைகள் அனைத்தும் நீங்கும், தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.

விருத்தாசலம் மற்றும் சேத்தியாதோப்பு நகரங்களில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஸ்ரீமுஷ்ணம் அமைந்துள்ளது. ரெயிலில் வந்தால் விருத்தாசலத்தில் இறங்கி செல்ல வேண்டும்.

Read Entire Article