"தோல்விக்கான பழியை நானே ஏற்று கொள்கிறேன்.." - கேப்டன் தோனி

4 hours ago 2

பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 52-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ஏற்கனவே 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்துவிட்ட முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்த சென்னை கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஜேக்கப் பெத்தேலும், விராட் கோலியும் பெங்களூரு அணியின் பேட்டிங்கை தொடங்கினர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்திய பெத்தேல், தொடர்ந்து வேகமாக மட்டையை சுழட்டினார். கலீல் அகமதுவின் இன்னொரு ஓவரில் கோலி 2 சிக்சர் பறக்க விட்டார். இதனால் ஸ்கோர் தடாலடியாக உயர்ந்தது.

பெத்தேல் 27 ரன்னில் இருந்த போது தூக்கியடித்த பந்தை பிடிப்பதற்காக ஜடேஜாவும், பதிரானாவும் ஓடி வந்தனர். பந்து ஜடேஜாவின் கையில் சிக்கிய நிலையில் அவர் மீது பதிரானா இடித்ததால் பந்து நழுவிப் போனது. இதனால் கண்டம் தப்பிய 21 வயதான பெத்தேல் பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டதுடன் ஐ.பி.எல்.-ல் தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

ஸ்கோர் 97-ஐ எட்டிய போது (9.5 ஓவர்) பெத்தேல் (55 ரன், 33 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) பதிரானா வீசிய பந்தில் கேட்ச் ஆனார். மறு ஓவரில் கோலி பவுண்டரியுடன் அரைசதத்தை கடந்தார். நடப்பு தொடரில் அவரது 7-வது அரைசதம் இதுவாகும். கோலி தனது பங்குக்கு 62 ரன்கள் (33 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார்.

கடைசி 2 ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை ஆல்-ரவுண்டர் ரொமாரியோ ஷெப்பர்டு தலைகீழாக மாற்றினார். 19-வது ஓவரை வீசிய கலீல் அகமதுவின் பந்து வீச்சில் 4 சிக்சர், 2 பவுண்டரி விளாசி மைதானத்தை குலுங்க வைத்தார். நோ-பால் உள்பட அந்த ஓவரில் 33 ரன்கள் வந்தது. பதிரானா வீசிய இறுதி ஓவரில் ஷெப்பர்டு மேலும் 2 சிக்சர், 2 பவுண்டரி விரட்டியதோடு 14 பந்தில் அரைசதம் அடித்து பிரமாதப்படுத்தினார். ஐ.பி.எல்.-ல் ஒரு வீரரின் 2-வது அதிவேக அரைசதம் இதுவாகும். தனது முதல் 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பதிரானா கடைசி ஓவரில் 21 ரன்களை வாரி வழங்கினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்தது. ஷெப்பர்டு 53 ரன்களுடனும் (14 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்), டிம் டேவிட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 54 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் கடைசி இரு ஓவரில் அதிக ரன் திரட்டிய அணி என்ற சிறப்பை பெங்களூரு பெற்றது. சென்னை தரப்பில் பதிரானா 3 விக்கெட்டும்,சாம் கர்ரன், நூர்அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 214 ரன் இலக்கை நோக்கி சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆயுஷ் மாத்ரேவும், ஷேக் ரஷீத்தும் களம் புகுந்தனர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய 'இளம் புயல்' ஆயுஷ் மாத்ரே, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் ஒரே ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டி அட்டகாசப்படுத்தினார். ஸ்கோர் 51 ஆக உயர்ந்த போது ஷேக் ரஷீத் 14 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சாம் கர்ரன் (5 ரன்) நிலைக்கவில்லை.

3-வது விக்கெட்டுக்கு மாத்ரேவும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் கூட்டணி போட்டு பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 17 வயதான மாத்ரே 25 பந்தில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து ரன்மழை பொழிந்த மாத்ரே 94 ரன்களில் (48 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) நிகிடி பந்தில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த டிவால்ட் பிரேவிஸ் (0) நிகிடி வீசிய புல்டாஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஆனால் டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்யலாமா என்று யோசித்தார். நேரம் கடந்ததால் அப்பீல் செய்ய முடியவில்லை. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வது தெரிந்தது. தவறான எல்.பி.டபிள்யூ. வழங்கப்பட்டதை கண்டு நொந்து போய் விட்டார். அடுத்து டோனி வந்தார். மறுமுனையில் 3 முறை கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த ஜடேஜா அணியை கரைசேர்க்க போராடினார்.

கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் வீசினார். முதல் 2 பந்தில் 2 ரன் வந்தது. 3-வது பந்தில் டோனி (12 ரன், 8 பந்து) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்தார். அடுத்து நுழைந்த ஷிவம் துபே 4-வது பந்தில் சிக்சர் அடித்தார். அது நோ-பாலாக மாறியதால் மீண்டும் வீசப்பட்ட 4-வது பந்தில் ஒரு ரன்னும், 5-வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர். இதையடுத்து கடைசி பந்தில் சென்னை அணிக்கு 4 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டுவாரா ? என்ற ஆவல் தொற்றியது. ஆனால் துபேவினால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் பெங்களூரு அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்களே எடுத்தது. 18-வது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் ஷர்மா 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அந்த ஓவர் தான் ஆட்டத்தின் முடிவில் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டது. பெங்களூரு தரப்பில் நிகிடி 3 விக்கெட் கைப்பற்றினார்.

11-வது லீக்கில் ஆடிய பெங்களூரு அணி 8-வது வெற்றியை ருசித்ததுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஏறக்குறைய அந்த அணி பிளே-ஆப் சுற்றை எட்டிவிட்டது என்றே சொல்லலாம். சென்னை அணிக்கு இது 9-வது தோல்வியாகும்.

தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் தோனி, "நான் இறுதிக் கட்டத்தில் இரண்டு பெரிய ஷாட்டுகளை ஆடி மற்ற வீரர்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்து இருக்க வேண்டும். நான் செய்ததுதான் தவறு. எனவே அதற்கான பழியை நானே ஏற்றுக் கொள்கின்றேன். பெங்களூரு அணியில் ஷெப்பர்டு கடைசி கட்டத்தில் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

நாங்கள் எந்த மாதிரி பந்து வீசினாலும் ஷெப்பர்டு, அதை சிக்சருக்கு அடித்து அபாரமாக செயல்பட்டார். எங்கள் அணியின் பந்துவீச்சாளார்கள் அதிக அளவு யாக்கர்கள் வீச வேண்டும். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடும் போது யாக்கர் தான் சிறந்த ஆப்ஷன். ஒரு வேலை உங்களால் யாக்கர் சிறந்த முறையில் வீச முடியவில்லை என்றால் லோ புல்டாஸ் பந்தை வீசவேண்டும். அதுதான் இரண்டாவது சிறந்த ஆப்ஷன்.

பதிரானா போன்ற வீரர்கள் பந்து வீச்சில் வேகம் இருக்கின்றது. அவரால் பவுன்சரும் வீச முடியும். ஒருவேளை அவர் யாக்கர் மிஸ் செய்தால் பேட்டர்கள் அதனை சுலபமாக சிக்சருக்கு அடித்து விடுகிறார்கள். எங்கள் அணியின் பேட்ஸ்மேன்களும் பேடுக்கு வரும் பந்தை அடிக்கும் விதத்தை அதிக அளவு பயிற்சி செய்ய வேண்டும்

எங்கள் அணியின் பெரும்பாலான பேட்டர்கள் அந்த விதத்தில் ஆடுவதில் தயக்கம் காட்டி வருகிறார்கள். ஜடேஜா அபாரமாக விளையாடினார். ஆனால் அவர் அனைத்தையும் பெரிய ஷாட் ஆட முயற்சி செய்கின்றார். இந்த தொடரில் நாங்கள் பேட்டிங்கில் தான் பின்தங்கி இருந்தோம். ஆனால் இன்று பேட்டர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். பந்துவீச்சில் இன்று சொதப்பிவிட்டோம்" என்று கூறினார்.

Read Entire Article