சென்னை: “தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 46 தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 1.39 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் தொழில்துறையில் எவரெஸ்ட் சிகரத்தை தொடும் அளவுக்கு சாதனைகளை படைக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் இந்த புள்ளி விவரங்களின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியுள்ளது.