சென்னை: தொழில் உரிமத்தை வரும் 31க்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் சிறு, குறு முதல் பெரிய வியாபார கடைகள் வரை இயங்கி வருகின்றன. இதில், 67,000 கடைகள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன. இதற்குமுன், தொழில் உரிமம் பெற குறைந்தபட்சமாக, 500 ரூபாய் முதல், 10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, ஒவ்வொரு நிதியாண்டிலும், சிறிய கடைகள், உணவகங்கள், துணி கடைகள் உள்ளிட்டவை, தங்கள் கடைகளின் தன்மைக்கு ஏற்ப உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேநேரம், ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிப்பதற்கு பதிலாக, குறைந்தபட்ச கால இடைவெளி வழங்க வேண்டும் என, வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் தொழில் உரிமத்திற்கான அவகாசம், ஓராண்டில் இருந்து, மூன்றாண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. மேலும், பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த சில தொழில்களுக்கு, 50 முதல் 100 சதவீதம் வரை தொழில் உரிம கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கடைகளுக்கு, 20 ரூபாய் இருந்த தொழில் உரிம கட்டணம், 1,500 முதல், 10,000 ரூபாய் வரை என, பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சிறு, குறு கடைகளுக்கு, 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய், சிறிய கடைகளுக்கு, 7,000 முதல் 10,000 ரூபாய்; நடுத்தர கடைகளுக்கு, 10,000 முதல் 20,000 ரூபாய், பெரிய கடைகளுக்கு, 15,000 முதல் 50,000 ரூபாய் என, 500க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் பட்டியலிடப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, மூன்றாண்டு கால தொழில் உரிமம் வழங்கும் பணியை மாநகராட்சி தொடங்கி உள்ளது. மேலும், அமர்ந்து சாப்பிடக்கூடிய டீ கடை முதல் ஓட்டல் வரை, சதுர அடி பரப்பளவு அடிப்படையில் 5,000 முதல் 15,000 ரூபாய் வரை, கேன்டீன், பாஸ்புட், ரெஸ்டாரன்ட் ஆகியவையும் சதுர அடி பரப்பளவில் 5,000 முதல் 20,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்பா போன்றவற்றிற்கு, 25,000 ரூபாய் வரை தொழில் உரிமம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தாண்டுக்கான தொழில் வரி புதுப்பித்தல் வரும் 31க்குள் முடிகிறது. எனவே, தொழில் உரிமத்தை புதுப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் ஆணையரிடம் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும். புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் 3 ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும். தற்போது, வணிகர்களின் கோரிக்கையையடுத்து தொழில் உரிமம் ஓராண்டு அல்லது இரண்டாண்டு அல்லது மூன்றாண்டு என தொழில் உரிமத்தினை விருப்பம் போல் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி வணிகர்கள் தங்களது உரிமத்தை இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையத்திலும், மண்டல அலுவலகங்களிலும் மற்றும் சம்மந்தப்பட்ட உரிம ஆய்வாளரிடம் கையடக்க கருவி மூலமாகவும் தொழில் உரிமத்தினை வரும் 31ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 044-25619305 என்ற எண்ணை தொடர்ப்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* வணிகர்களின் கோரிக்கையையடுத்து தொழில் உரிமம் ஓராண்டு அல்லது இரண்டாண்டு அல்லது மூன்றாண்டு என தொழில் உரிமத்தினை விருப்பம் போல் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
The post தொழில் உரிமம் புதுப்பிக்க 31ம் தேதி வரை அவகாசம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.