தொழிலாளர்கள் மீதான அரசின் அலட்சியப் போக்கு கண்டனத்திற்குரியது - ஓ.பன்னீர்செல்வம்

1 day ago 1

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் அபாயகரமான தொழிற்சாலைகள் என வகைப்படுத்தப்பட்டு, அங்கு முறை ஆய்வுகளின் கால அளவு ஆறு மாதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது என அரசு அறிவித்தாலும், ஆய்வுகள் சரியாக மேற்கொள்ளப்படாததன் காரணமாக பட்டாசு ஆலைகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரசாயன கலவையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டு மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்; ஏழு பேர் படுகாயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைந்து குணமடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பட்டாசு தொழிற்சாலைகள் காலமுறைதோறும் ஆய்வு செய்யப்படுவதாகவும்; பட்டாசு தொழிற்சாலைகளில் அபாயகரமான பொருட்களை பாதுகாப்பாக சேமித்தல் மற்றும் கையாளப்படுதல் குறித்து சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும்; பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பட்டாசு தயாரிப்பின்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு செயல்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக, சிவகாசியில் பாதுகாப்பு பயிற்சி மையம் துவங்கப்பட்டு அதன்மூலம் 458 பேர் பயிற்சி பெற்றுள்ளதாகவும்; ரசாயனங்கள் கலத்தல் மற்றும் நிரப்புதல் பணியில் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து 843 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும்; தொழிற்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும்; நடமாடும் பிரச்சார வாகனம் மூலமும் பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், இவையெல்லாம் நடைமுறையில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அனைத்தும் காகித வடிவில்தான் உள்ளது. கடுமையான பணியாளர் பற்றாக்குறையும் இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நேற்று சிவகாசி அருகே எம். புதுப்பட்டியில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு சாட்சி. தி.மு.க. அரசின் தொழிலாளர்கள் மீதான அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் பட்டாசு ஆலையில் அடிக்கடி ஏற்படும் வெடிவிபத்துகளை குறைக்க முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு, கொள்கை விளக்கக் குறிப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article