தொப்புள் கொடி விவகாரத்தில் மன்னிக்கவே முடியாது யூடியூபர் இர்பான் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி

3 weeks ago 9

மதுரை: பிரசவத்தின்போது குழந்தை தொப்புள் கொடியை துண்டிக்கும் வீடியோவை வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: யூடியூபர் இர்பான், தனது மனைவி பிரசவத்தின்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை துண்டிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் மருத்துவரல்லாத ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபடுவது தேசிய மருத்துவ கமிஷன் சட்டம் 2021ன் படி குற்றம். இச்சட்டத்தை மீறிய செயல் தொடர்பாக யூடியூபர் இர்பான் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையின் மூலம் செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஈடுபட அனுமதித்த சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் பெண் டாக்டர் நிவேதிதா மீதும், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் நிவேதிதா தொடர்ந்து மருத்துவ பணி செய்ய தடை விதிக்க தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறை மூலம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களை இந்த அரசு காப்பாற்ற முனையாது.

இர்பான் மனைவி கர்ப்பமாக இருந்தபோது, குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் எடுத்து வெளியிட்டார். துபாயில் ஸ்கேன் எடுத்திருந்தாலும் குழந்தையின் பாலினம் குறித்து தகவல் வெளியிட்டது தவறு. இருப்பினும் அப்போது இர்பான் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார். இதை தமிழ்நாட்டில் செய்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். தொப்புள்கொடி விவகாரத்தில் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம். இவ்வாறு கூறினார்.

 

The post தொப்புள் கொடி விவகாரத்தில் மன்னிக்கவே முடியாது யூடியூபர் இர்பான் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article