பள்ளிகொண்டா, ஏப்.4: பள்ளிகொண்டாவில் தொண்டைக்குழியில் பழவிதை சிக்கி மயில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகொண்டா அடுத்த கானார் தெருவில் உள்ள விவசாய நிலங்களில் சப்போட்டா உட்பட பழ வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அவற்றை உண்பதற்காக பல்வேறு பறவைகள் மற்றும் காட்டு விலங்குகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்நிலையில், நேற்று அங்குள்ள சப்போட்டா பழத்தோட்டத்தில் ஒரு வயதுடைய ஆண் மயில் இறந்து கிடப்பதாக ஒடுகத்தூர் வனச்சரகர் வெங்கடேசனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த வனவர் சுகுமார் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சப்போட்டா பழத்தை சாப்பிட்டபோது பழவிதை தொண்டைக்குழியில் சிக்கி மயில் இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர், மயிலை மீட்டு பொய்கை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரேத பரிசோதனை செய்ததும் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா உத்தரவின்பேரில் பள்ளிகொண்டா காப்புக்காட்டில் மயிலை புதைத்தனர். பழவிதை சிக்கி மயில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post தொண்டைக்குழியில் பழவிதை சிக்கி மயில் பலி appeared first on Dinakaran.