கருட வாகனத்தில் சனி பகவான்
பொதுவாகவே, காக வாகனத்துடன்தான் சனி பகவான் காணப்படுவார். ஆனால், குருத்தலமாக விளங்கும் ஆலங்குடி தலத்தில் அவருக்கு வாகனம், கருடன்! இந்தத் தலத்தில் ஈசன் ஆபத்சகாயேஸ்வரராக அருளாட்சி புரிகிறார்.
கண்ணீர் பெருக்கும் கருடாழ்வார்
சாதாரணமாக எல்லா வைணவத் தலங்களிலும் கருவறையில் இருக்கும் மூர்த்தத்தைவிட கருடாழ்வார் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சூலூர்பேட்டை – காளஹஸ்தி பாதையில் 5 கி.மீ. தொலைவில் உள்ள மன்னார் போளூர் கிருஷ்ணசுவாமி கோயிலில் கிருஷ்ண பகவானைவிட கருடாழ்வார் உயரம் அதிகம். ஆகவே, இவர் தரை மட்டத்திற்குக் கீழே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணனின் கருணையை வியந்து, கண்களிலிருந்து நீர் பெருகி, கன்னங்களை நனைக்கும் இந்தத் தோற்றம் நெகிழ்ச்சியானது.
தர்ம வாள்
ராவணன் கையில் வைத்திருந்த வாள் அவனுக்கு சிவபெருமானால் அருளப்பட்டது. அதன் பெயர் சந்திரஹாசம். அந்த வாளை வைத்திருந்தவரை யாராலும் அவனை வெல்ல முடியவில்லை. அதே சமயம் அந்த சந்திரஹாச வாளைத் தர்மத்தை காப்பாற்ற மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதர்மத்துக்குப் பயன்படுத்தினால் அது சக்தி இழந்துவிடும். ராவணன் சீதையை ஆகாய மார்க்கமாகக் கவர்ந்து சென்றபோது அதைத் தடுத்த ஜடாயுவை அந்த வாளால் வெட்டி வீழ்த்தினான் ராவணன். அதிலிருந்து அந்த வாள் அவனுக்குப் பயன்படாது போயிற்று.
தொட்டில் வரமருளும் தூக்கப் பிரார்த்தனை
பொதுவாக கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு வருவார்கள். ஆனால், இந்த கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப் பிறகு, சந்நதியில் ஒரு குட்டித் தூக்கமே போடலாம். இந்த அதிசய வழிபாட்டைக் கொண்டது, அதிசய வழிபாட்டைக் கொண்டது, தமிழக – ஆந்திர எல்லையில் திருவள்ளூர் மாவட்டம், மாநெல்லூர் வீரபத்திரர் கோயில். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்து 9 விரலி மஞ்சளை கையில் வைத்துக் கொண்டு, 9 முறை பிராகார வலம் வருகின்றனர். பின் அதை அம்பாள் பாதத்தில் வைத்துவிட்டு, சுவாமி சந்நதி எதிரில் படுத்து குட்டித் தூக்கம் போடுகின்றனர். இதனால் வீரபத்திரர் குழந்தை பாக்கியத்தை விரைவாக அருளுவார் என்று நம்புகின்றனர்.
விஸ்வாமித்திரர் உருவாக்கிய சிவாலயம்
விஸ்வாமித்திரரால் உருவாக்கப்பட்ட சிவாலயம் நெல்லை – ராதாபுரம் வட்டம், இடிந்தகரைக்கு அருகே விஜயாபதி எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. ஈசன் காசி விஸ்வநாதராகவும் தேவி அகிலாண்டேஸ்வரியாகவும் அருள்கின்றனர்.
நோய் தீர்க்கும் கஷாய பிரசாதம்
முப்பெருந்தேவியர்களும் ஓர் வடிவில் அருளும் தலம் கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை ஆலயம். மூகன் எனும் அசுரனை வதைத்த தேவி மூகாம்பிகையாய் இத்தலத்தில் நிலை கொண்டாள். இத்தலத்தில் தினமும் அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு. ஏலக்காய், லவங்கம், மிளகு, சர்க்கரை போன்றவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி இறைவிக்கு நிவேதித்து பின் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த கஷாயம் நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது என்கிறார்கள்.
அமர்ந்த ஆண்டாள்
பெரும்பாலான வைணவ ஆலயங்களில் தனி சந்நதியிலோ அல்லது கருவறையிலோ காட்சி தரும் ஆண்டாள் நின்ற கோலத்தில்தான் காணப்படுகிறாள். மாலவனுக்கு மாலை சூட்டத் தயாராக இருக்கும் கோலம்! ஆனால், மதுரைக்கு அருகில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் ஆண்டாள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். ரங்கனுடன் திருமணம் முடித்த நிம்மதி போலிருக்கிறது!
உண்மையை உணர்த்திடும் கண்ணாடி
சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் ஒரு நிலைக்கண்ணாடியை நடராஜப் பெருமானாக நினைத்து வழிபடுகின்றனர். அதில் நம் உருவத்தை நாமே காணும்போது நாமே இறைவன் எனும் தத்துவம் தோன்றுகிறது. மேலும், இங்குள்ள அர்த்த மண்டபத்தில் மற்றொரு நடராஜப் பெருமான் ஐந்து சந்தர்கலைகளுடன் அருள்வது வேறெங்கும் காணமுடியாத அற்புதம்.
அனந்தபத்மநாபன்
The post தொட்டில் வரமருளும் தூக்கப் பிரார்த்தனை appeared first on Dinakaran.