மதுராந்தகம்: பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ₹26,500 கோடி நிதியை தேசிய நெடுஞ்சாலை துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக படாளம், புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் முக்கிய சாலையாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விளங்கி வருகிறது. இந்த சாலையானது சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக திருச்சி சென்றடைகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்வதற்கு மிக முக்கிய நான்கு வழி சாலையாக இந்த சாலை உள்ளது. இந்த சாலையில் திண்டிவனத்தில் இருந்து திருச்சி வரை இடையில் உள்ள கிராமங்களில் மேம்பாலங்கள் அமைத்து போக்குவரத்து நெரிசல் இன்றி உள்ளது.
ஆனால், இந்த தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடி வரை 55 கிலோமீட்டர் நெடுஞ்சாலையில் புக்கத்துறை, படாளம், மேலவலம்பேட்டை, மோச்சேரி சாலை ஆகிய ஜங்ஷன் பகுதிகளில் மேம்பாலங்கள் இல்லை. இதானல், தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும், தேசிய நெடுஞ்சாலை அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.இதனால், அப்பகுதி மக்களும் உயிரிழப்பு ஏற்படும் போதெல்லாம் மேம்பாலம் அமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபடும் பொதுமக்களிடம் போலீசார் மேம்பாலம் அமைக்கப்படும் என உறுதியளித்திருந்தனர்.
மேலும் விழா நாட்கள், விடுமுறை தினங்கள், சுபமுகூர்த்த தினங்கள் ஆகிய நாட்களில் அளவுக்கு அதிகமான வாகனங்கள் தென் மாவட்டத்திற்கு இந்த சாலையில் சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் இந்த பகுதியில் ஏற்படுகிறது. இதனால் படாளம், புக்கத்துறை, மேலவளம் பேட்டை, அய்யனார் கோயில் உள்ளிட்ட ஜங்ஷன் பகுதியில் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முடியாமல் பல மணி நேரம் கிராம மக்கள் காத்துக் கிடக்கும் நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், படாளம் ஜங்ஷன் பகுதியில் இளைஞர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி இறந்து விடுகிறார். இதனால் இறந்தவரின் தாயார் தமிழ்நாடு அரசுக்கு படாளம் ஜங்ஷன் பகுதியில் வேறு எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது. எனவே, இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
தொடர் விபத்து சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் குறித்து தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ₹26,500 கோடி மதிப்பில் எட்டு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக, பூக்கத்துறை ஜங்ஷன் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு கழிவுநீர் கால்வாயுயடன் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியுள்ளது. இதேபோன்று, படாளம் ஜங்ஷன் பகுதியிலும் மேம்பாலம் அமைப்பதற்கு சாலையோரம் இருந்த கட்டிடங்கள் அளவீடு செய்து இடிக்கப்பட்டு மேம்பாலம் கட்டும் பணிகள் தொடர்ந்து வருகிறது. மேலும், மதுராந்தகம் தெற்கு பைபாஸ் ஜங்ஷன் பகுதியில் சாலையோர கடைகள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு அங்கிருந்த நடைபாதை மேம்பாலமும் அகற்றப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலி
தினகரன் நாளிதழில் கடந்த ஆண்டு பல முறை செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யவேண்டும் என படங்களுடன் செய்தி வெளியாகின. இந்த செய்தி எதிரொலியாக பரனூர் சுங்கச்சாவடி முதல் ஆத்தூர் சுங்கச்சாவடி வரையில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக படாளம், புக்கத்துறை ஜங்ஷன் பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனால், அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் தினகரன் நாளிதழுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துகொண்டனர்.
The post பரனூர் சுங்கச்சாவடி – ஆத்தூர் சுங்கச்சாவடி வரையிலான தேசிய நெடுஞ்சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய ரூ.26,500 கோடி நிதி ஒதுக்கீடு: முதல் கட்டமாக படாளம், புக்கத்துறை பகுதிகளில் மேம்பாலப் பணி துவக்கம் appeared first on Dinakaran.