சென்னை,
வங்கக் கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நேற்று நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (புதன்கிழமை) வலு இழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்கத் தொடங்கும் என்றும், இதனால் தமிழ்நாட்டில் வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தொடர்மழை எதிரொலியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் மணிகண்டன் அறிவித்துள்ளார்.
* கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி அறிவித்துள்ளார்.
* கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.