*2 நாளில் 2500 பேர் வருகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு தொடர் விடுமுறை நாட்களையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 2 நாட்களில் 2500 பேர் வரை வந்துள்ளனர் என வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவடட்ம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தென்மேற்கு பருவமழைக்கு பிறகு ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகமானது. பிற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
கடந்த வாரத்தில் சில நாட்களாக கூட்டம் குறைவாக இருந்தாலும் காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் 28ம் தேதி மற்றும் நேற்று 29ம் தேதி விடுமுறை நாட்களில் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதில், நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமானது.
அதிலும், குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரித்து ரம்மியமாக கொட்டிய தண்ணீரில் வெகுநேரம் நின்று ஆனந்த குளியல் போட்டனர். மேலும், சிறுவர்கள் மற்றும் பெண்கள் அருகே குளம்போல் தேங்கிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பள்ளி காலாண்டு விடுமுறையால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று என 2 நாட்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால், வால்பாறை மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post தொடர் விடுமுறை எதிரொலி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.