ஊட்டி: தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி, கொடைகானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் சமவெளி பகுதி உள்பட பெரும்பாலான பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதனால் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மக்கள் கூட்டத்தால் களைகட்டி உள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி- மேட்டுப்பாளையம், ஊட்டி-குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் ஊட்டி-குன்னூர் இடையே இயக்கப்படும் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், உலக பாரம்பரிய தினமான இன்று நீலகிரி மலை ரயிலுக்கும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் மரியாதை செலுத்தும் விதமாக இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதன்படி கோடைகால சீசனை முன்னிட்டு வார விடுமுறை நாட்களில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலை ரயில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. கோடை சீசன் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இங்கு வருகை தருவர். நகரில் உள்ள பேரிஜம் வனப்பகுதி, பைன் மரக்காடுகள், குணா குகை, மோயர் பாயிண்ட், நட்சத்திர ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளன. கோடை தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தி வரும் நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர். இந்நிலையில், இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து இளவரசியின் இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். நகரில் உள்ள நட்சத்திர ஏரியில் ஜாலியாக படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
The post தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.