தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

1 hour ago 1

பெரியகுளம்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் விடுமுறை காலங்களில் வந்து குளித்து மகிழ்வர். ஏற்கனவே, வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீர்வரத்து சீராகி கடந்த 9ம் தேதி முதல் முளிக்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரத்தில் பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு சென்று பார்க்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் அருவியில் நீர் வரத்து குறைந்து சீராகும் வரை குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சின்ன சுருளியில் குளிக்க 2வது நாளாக தடை
தேனி மாவட்டம், வருசநாடு அருகே, கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. மேகமலை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மேகமலை அருவி என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இரவங்கலாறு, உடங்கல் ஆறு உள்ளிட்ட மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்ததால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அருவியில் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்தனர். இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு உத்தரவு வரும் வரை தடை தொடரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு கும்பக்கரை அருவியில் குளிக்க தடை appeared first on Dinakaran.

Read Entire Article