தொடர் மழையால் 22,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு

1 month ago 5

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் மழை நீடித்ததால் 22 ஆயிரம் மீனவர்கள் 3வது நாளாக நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதன்காரணமாக 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. மயிலாடுதுறையில் நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மழை காரணமாக திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த செம்பரையில் இருந்து புள்ளம்பாடி செல்லும் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 6,500 ஏக்கர் குறுவை பயிர்களை நேற்றுமுன்தினம் மழை நீர் சூழ்ந்தது. நேற்று மழை இல்லாததால், வயலில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று 10,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 2800 விசைப்படகுகள், பைபர் மற்றும் நாட்டுப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 2,000, மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,000 மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், முதல் கட்டுமாவடி வரை 27 மீனவ கிராமங்களில் 3,000 மீனவர்கள், புதுக்ேகாட்டை மாவட்டத்தில் 2,000 மீனவர்கள் நேற்று வீடுகளில் முடங்கி உள்ளனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டையில் 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருநாகேஸ்வரம், இடைப்பாடி, பூலாம்பட்டி, தேவூர், பக்கநாடு போன்ற பகுதியை சுற்றி உள்ள 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் தயாரிக்கப்பட்டுள்ள செங்கற்களை தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.

* கப்பல் போக்குவரத்து நிறுத்தம்

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே இயக்கப்படும் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் போக்குவரத்து நேற்றுமுன்தினம் (15ம்தேதி) ரத்து செய்யப்பட்டது. இதேபோல் இன்றும் (17ம்தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

* குமரியில் நள்ளிரவில் திடீர் கடல் சீற்றம் மணலில் புதைந்த வீடுகள்

குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றமாக காணப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி ஊருக்குள் புகுந்தது. இதனால் அழிக்கால் கிழக்கு தெரு, மேற்கு தெரு, நடுத்தெரு ஆகிய பகுதியில் 100 வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கடற்ரையின் முன் வரிசை வீடுகளுக்குள் கடல் நீருடன் மணலும் சேர்ந்து புகுந்தது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாயின. தகவலறிந்ததும் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி மற்றும் அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகளை சூழ்ந்த வெள்ளத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி விடும் பணியில் ஈடுபட்டனர்.

The post தொடர் மழையால் 22,000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2 நாளில் ரூ.100 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article