
கெய்ரோ,
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு எகிப்து. இந்நாட்டில் டெலிகாம் எகிப்து என்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் உள்ளது. எகிப்தின் முக்கிய செல்போன் சேவை நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெலிகாம் எகிப்து நிறுவனம் தலைநகர் கெய்ரோவில் 7 அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ளது. இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் முக்கிய கருவிகள் தீயில் கருகி நாசமாகின.
இந்த தீ விபத்தால் எகிப்தில் பெரும்பாலான செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் டெலிகாம் எகிப்து நிறுவனத்தில் பணியாற்றிய 14 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தனர். மேலும், செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.