தொடரை வென்றது இந்தியா: ஸ்மிரிதி மந்தனா அபார சதம்

3 months ago 14


அகமதாபாத்: நியூசிலாந்து மகளிர் அணியுடனான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து 49.5 ஓவரில் 232 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புரூக் ஹாலிடே அதிகபட்சமாக 86 ரன் (96 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். ஜார்ஜியா பிளிம்மர் 39, இசபெல்லா கேஸ் 25, லீ டுஹுஹு 24*, மேடி கிரீன் 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர் (3 பேர் ரன் அவுட்).

இந்திய பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 3, பிரியா மிஷ்ரா 2, ரேணுகா சிங், சைமா தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா இணைந்து துரத்தலை தொடங்கினர். ஷபாலி 12 ரன்னில் வெளியேற, மந்தனா – யஸ்டிகா பாட்டியா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது.யஸ்டிகா 35 ரன் எடுத்து சோபி டிவைன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மந்தனா அதிரடியாக விளையாடி நியூசி. பந்துவீச்சை சிதறடித்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தனர்.

மந்தனா 100 ரன் (122 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஹன்னா ரோவ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 22 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா 44.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து அபாரமாக வென்றது. ஹர்மன்பிரீத் கவுர் 59 ரன் (63 பந்து, 6 பவுண்டரி), தேஜல் ஹசப்னிஸ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மந்தனா சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

The post தொடரை வென்றது இந்தியா: ஸ்மிரிதி மந்தனா அபார சதம் appeared first on Dinakaran.

Read Entire Article