தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் தொடங்கியது : ஒன்றிய அரசுக்கு எதிராக ஒன்றிணையும் மாநிலங்கள்!!

7 hours ago 2

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. இதில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. அதன்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதால் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கும் சூழல் என்பது தான் தற்போது நிகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், ஒடிசா மாநில முன்னாள் அமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான சஞ்சய்குமார் தாஸ் பர்மா, பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி. ராமாராவ், சிரோமணி அகாலிதளம் சார்பில் பல்விந்தர் சிங், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி சார்பில் உதய் சீனிவாஸ் எம்.பி., இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் சலாம், கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் மானி உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

*தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள்,கொடைக்கானல் பூண்டு ஆகியவை மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டன.

*தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு ஆங்கிலம் மற்றும் அவரவர் தாய்மொழியில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

*முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு : “இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம். #FairDelimitation-க்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்”

The post தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் தொடங்கியது : ஒன்றிய அரசுக்கு எதிராக ஒன்றிணையும் மாநிலங்கள்!! appeared first on Dinakaran.

Read Entire Article