சென்னை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “மாநிலங்களை ஒருங்கிணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தாமல் தொகுதி மறுசீரமைப்பை பாஜக அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வத்துள்ளன.
அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றாமல் திடீரென தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் வடமாநிலங்களுக்கு தொகுதிகள் கணிசமாக அதிகரிக்கும். வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரிக்கும் அதே நேரத்தில் தென் மாநிலங்களின் தொகுதிகள் கணிசமாக குறையும். குறுகிய அரசியல் லாபத்துக்காக தொகுதி மறுசீரமைப்பை பயன்படுத்தப் பார்க்கிறது பாஜக அரசு. மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் தொகுதி மறுவரையறை என்பது மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையாகும்.
தற்போதைய தொகுதி மறுசீரமைப்பு என்பது தென்மாநிலங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமையும். எண்ணிக்கை மட்டுமல்ல; இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்ட விவகாரம். தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும். ஒன்றியத்தில் அதிகாரக் குவிப்பு என்பது நாட்டின் பன்முகத்தன்மை, கலாச்சாரம், மாநில உரிமைகள் ஆகியவற்றுக்கு ஆபத்து. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களுடன் ஒன்றிய அரசு ஆலோசிக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.மாநிலங்களுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்து எட்டப்பட்ட பிறகே தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்”இவ்வாறு தெரிவித்தார்.
The post தொகுதி மறுசீரமைப்பு குறித்து தெளிவுபடுத்த வேண்டியது ஒன்றிய அரசின் கடமை: கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி appeared first on Dinakaran.