திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று காலை வன்னியர் சங்க மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. இதில் காலை 11 மணி வரை 20 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு மாமல்லபுரத்தில் கடந்த 11ம்தேதி மாநாடு நடத்தினோம்.
இதுகுறித்து மத்திய அரசுக்கு தெரிவித்த நிலையில் தமிழக அரசு இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் இட ஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதுகுறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தை கூட்டி உள்ளார் என்றார்.
யாருக்கெல்லாம் தகவல் அனுப்பி உள்ளீர்கள்? என்று நிருபர்கள் கேட்டபோது, அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளோம். பாமக செயல் தலைவருக்கும் (அன்புமணி) வாட்ஸ்அப் மூலமாகவே தகவல் அனுப்பப்பட்டது என்றார்.
ராமதாஸ் விரக்தி;
வன்னியர் சங்கத்தை தான் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில், தனக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்று ராமதாஸ் நம்பினார். ஆனால் வன்னியர் சங்க நிர்வாகிகளும் முழுமையாக பங்கேற்காமல் புறக்கணித்துள்ளதால் ராமதாஸ் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்புமணியை சமாதானம் செய்து தைலாபுரம் அழைத்து வந்து ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முக்கிய நிர்வாகிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
The post தைலாபுரத்தில் வன்னியர் சங்க கூட்டம்; அன்புமணிக்கு வாட்ஸ்அப்பில் தகவல்: பு.தா.அருள்மொழி பேட்டி appeared first on Dinakaran.