கடலூர்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்...! என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.
தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.