சென்னை: தைப்பூசத்தையொட்டி தமிழகம் முழுவதும் முருகன் கோயில்களில் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி, காசிமேடு கடற்கரை சிக்னல் அருகே உள்ள புதுமனைகுப்பம் சிங்காரவேலன் நகரில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய புதிய குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு நேரில் களஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: நவம்பர் மாதம் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 252 பணிகளுக்கு 6039 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அதன் ஒரு பகுதியாக 700 குடியிருப்புகள் 100 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1080 கட்டுமானத்திற்கு அஸ்திவாரங்கள் போட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசென்னை பகுதியில் டயாலிசிஸ் சென்டர் அதிக தொகைக்கு மருத்துவ வசதியை தேடி செல்லக்கூடிய நிலை இருப்பதால் இந்த இடத்தில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு அந்த பணிகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பழனி முருகன் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு கூறியுள்ளார். ஒரு முருக பக்தராக காவடி எடுத்துள்ளார். அதை விமர்சனம் செய்ய தயாராக இல்லை. அவர் ஏற்கனவே செலுத்திய நேர்த்திக்கடன் 48 நாட்கள் செருப்பு அணிய மாட்டேன் என்றார். அரசியலை ஆன்மிகத்தோடு சம்பந்தப்படுத்தி அரசியல் ரீதியாக சொன்ன பதில், அதற்கு நேற்று நேர்த்தி கடன் செலுத்தி இருக்கிறார். இந்த ஆட்சியில் தான் பழனியில் குடமுழுக்கு நடந்துள்ளது. 98 கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பழனியில் தைப்பூசத்தில் ஒரு நாளைக்கு 2 லட்சம் பக்தர்கள் வந்தாலும் கூட எந்தவித சிறு அசம்பாவிதமும் நடைபெறாமல் தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
தைப்பூசம் அன்று மருதமலைக்கு 24 மணிநேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் வந்து இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 60 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தில் முருகனை தரிசித்து உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுப்பணியின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாளர் பிரபாகரன், சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரி சிவப்பிரகாசம், சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் பிரவீன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post தைப்பூசத்தையொட்டி தமிழகத்தில் முருகன் கோயில்களில் 60 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.