திருத்தணி, பிப்.13: திருத்தணி முருகன் கோயிலில், நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மலைக்கோயிலில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவர் முருகப்பெருமானுக்கு நெல் கதிர் மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில், மலைக்கோயில் மாடவீதியில் மேளதாளங்கள் முழங்க வள்ளி தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமான் குதிரை வாகன சேவை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தங்கத் தேர் பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் வழக்கமாக 9 மணிக்கு நடை சாத்தப்படும். எனினும், நேற்றிரவு 9 மணி கடந்துவிட்ட நிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் சாமி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து கோயில் நடை சாத்தப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
The post தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: நள்ளிரவு வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.