உலகம் முழுக்க பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தை மாதப்பிறப்பு ஒட்டிய பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகத் தொடர்ந்து கொண்டாடப்படுவது சிறப்பாகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தை பொறந்தா வழி பொறக்கும்
தை திருநாள் எப்படிக் கொண்டாடப்பட்டது என்பதை சொல்லும் பாடல் இது. அந்தப் பண்டிகையின் சிறப்பை மிக எளிமையாக விளக்குகிறது. ஒரு விவசாயியின் வேலைகளை படம் பிடித்துக்காட்டுகிறது.
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம் (தை)
ஆடியிலே வெத வெதைச்சோம்
தங்கமே தங்கம்
ஐப்பசியில் களை எடுத்தோம் தங்கமே தங்கம்
கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்
கழனி யெல்லாம் பொன்னாச்சு
தங்கமே தங்கம் (தை)
கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்
கல்யாணம் ஆகுமடி தங்கமே தங்கம்
வண்ண மணிக்கைகளிலே தங்கமே தங்கம்
வளையல்களும் குலுங்குமடி தங்கமே தங்கம் (தை)
முத்துச் சம்பா நெல்லு குத்தி தங்கமே தங்கம்
முத்தத்திலே சோறு பொங்கி தங்கமே தங்கம்
குத்து விளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
தங்கமே தங்கம் (தை)
1958ம் வருடம் வந்த தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் அ. மருதகாசி இந்த பாடலை இயற்றியிருக்கிறார்.
மகர சங்கராந்தி
தை முதல் நாளன்று சூரியன் மகர ராசிக்குள் நுழையும் நேரம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதை “மகர சங்கராந்தி” என்று கொண்டாடுகிறார்கள். சங்கராந்தி என்றால் சங்கமித்தல். அந்தி என்பது ஒரு மாதத்தின் முடிவில் மற்றொரு மாதத்தின் தொடக்கம் வரும் காலம். மார்கழி மாதத்தில் முடிவும், தை மாதத்தின் தொடக்கமும் நிகழும் நாளை, மகர சங்கராந்தி என்று சொல்லுகிறோம். ஆகம விதிகளின்படி, இது புனிதமான நாள் என்பதால், எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வைணவ ஆகமத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் பெருமாளுக்கு ஒரு பெயரும் உருவமும் உண்டு. தை மாதத்திற்கு உரிய தேவதை நாராயணன். நிறம் நீலம். ஆயுதம் 4 சங்குகள். திசை மேற்கு. பெருமாள் ஆலயங்களைப் போலவே, சிவாலயங்களிலும் தை முதல் நாள் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். 1008 குடங் களில் நீர்நிரப்பி அபிஷேகம் செய்ததாக குறிப்புகள் உண்டு. செம்பியன் மாதேவியார் இந்த நாளில் பல ஆலயங்களிலும் வழிபாடு நிகழ்த்தியுள்ளார். அக்காலத்தில் சோழ மன்னர்கள் தை முதல் நாள் அன்று சிவாலயங்களில் விசேஷமான வழிபாடுகள் நடத்தியதற்காக கல்வெட்டுக்கள் உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்தில் மகரசங்கராந்தித் திருவிழா 10 நாட்கள் சிறப்பு உற்சவமாக கொண்டாடப்படுவது குறித்த கல்வெட்டுகள் உண்டு.
உத்தராயண புண்ணிய காலம்
12 மாதங்களை இரண்டு ஆறு மாதங்களாகப் பிரித்து இரண்டு அயனங்கள் கணக்கிடுகிறோம். சூரியன் வடக்குப் புறமாக நகர்வது என்றும், தெற்குப்புறமாக தொடங்கி நகர்வது என்றும் கணக்கு. இதில் வடக்குப் பாதையில் செல்வது உத்தராயணம் என்றும், தெற்குப் பாதையில் செல்வது தட்சிணாயணம் என்றும் சொல்லுகின்றோம். தட்சிணாயணம் முடிந்து உத்தராயணத்தின் தொடக்க நாளே தை மாதத்தின் முதல் நாள். பல பெருமாள் கோயில்களில் இதையொட்டி வாசல்கள் உண்டு. உத்தராயண காலத்தில் வடக்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். தட்சிணாயண காலத்தில் தெற்கு வாசல் மூலமாக பெருமாளைச் சேவிக்கச் செல்ல வேண்டும். திரு வெள்ளறை, குடந்தை சார்ங்கபாணி கோயில் போன்ற ஆலயங்களில் இந்த வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி மாதம் வரை ஆறு மாதகாலம் உத்தராயண காலம் ஆடி முதல் மார்கழி வரை ஆறு மாத காலம் தட்சணாயண காலம்.
மார்கழி மாதம் மகாபாரதப் போர் நடந்தது. அதில் பத்தாம் நாள் போரில் பீஷ்மர் அர்ஜுனன் அம்புகளால் துளைக்கப்பட்டு கீழே சாய்கிறார். ஆனாலும் அவர் உயிர் போகவில்லை. அம்புப் படுக்கையிலேயே அவர் காத்திருக்கிறார். அவரிடத்தில் காரணம் கேட்கப்பட்ட பொழுது, “தட்சிணாயண காலத்தில் நான் உயிரை விட விரும்பவில்லை. உத்தராயண காலத்திற்காகக் காத்திருக் கிறேன் “என்று சொல்லுகின்றார். உத்தராயண காலத்தில் உயர்வு குறித்து கருட புராணம் முதலிய சாத்திரங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
உழைப்பின் பயனை அறுவடை செய்யும் திருநாள்
“ஆடிப்பட்டம் தேடி விதை” என்று தட்சிணாயண காலத்தில் விதை விதைத்து, விளைச்சலை, உழைப்பை, உழைப்பின் பலனை, தை மாதத்திலே பெறுவார் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற ஒரு பழமொழியும் ஏற்பட்டது. ஒரு காலத்தில் பெரும்பாலான சுபநிகழ்ச்சிகள் உத்தராயண காலத்தில், வளர்பிறை பருவத்தில் நடைபெறும். திருமணங்களை முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டாலும், தை பிறந்து அறுவடை எல்லாம் முடிந்து ஓய்வு காலமாக இருப்பதால் சிறப்பாகக் கொண்டாடலாம் என்று முடிவெடுப்பார்கள்.
போகி பண்டிகை
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் தட்சிணாயண காலத்தின் நிறைவு நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகி பண்டிகை. “போகி” என்பது இந்திரனின் பெயர்.கண்ணபிரான் அவதார காலத்தில் மழை வேண்டி இந்திரனுக்கு பூஜை செய்ய வேண்டும் என்று ஆயர்பாடியில் அனைவரும் விரும்பினார்கள். அப்போது கண்ணன், “சூரியன், இந்திரன், வாயு முதலிய அனைத்து தேவர்களும் மந்நாராயணனுக்கு கட்டுப்பட்டவர்கள். எனவே இந்திர னுக்கு பூஜை செய்வதை விட, நமக்கு மழையைத் தருவதும், பசுக்களுக்கு நல்ல தழைகளைத் தருவதுமாகிய இந்த மலைக்கு பூஜை போடலாம்” என்று சொன்னான். கோவர்த்தனகிரியாகிய மலைக்கு பூஜை செய்ய, கோபம் கொண்ட இந்திரன், கடுமையான மழை பொழிய, தன்னை நம்பிய ஆயர்களையும் பசுக்களையும் காப்பதற்காக கோவர்த்தனகிரியை குடையாய் பிடிக்கிறான் என்பது பாகவத புராணம்.கண்ணனுடைய பெருமைகளை உணர்ந்த இந்திரன், இறுதியாக கண்ணனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கோவிந்தராஜ பட்டாபிஷேகம் செய்கின்றான். எனவே போகிப்பண்டிகை என்பது கோவிந்த பட்டாபிஷேக நாள் என்று வைணவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் அன்று கோவிந்தராஜப்பெருமாளுக்கு பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
போகியில் ஆண்டாள் திருக் கல்யாணம்
மார்கழி மாதம் முழுக்க ஆண்டாள் மார்கழி நோன்பு நோற்றாள். மார்கழி நோன்பின் காரணம், கண்ணனை அடைய வேண்டும், கண்ணனை தரிசிக்க வேண்டும் என்பது. இறைவனாகிய கண்ணனைச் சந்திப்பதற்காக பாடிய தமிழ் “திருப்பாவை” என்பதால், இதனை சங்கத்தமிழ் என்று சொல்வார்கள். மார்கழி மாதத்தில் நிறைவு நாளான போகிப்பண்டிகை அன்று கண்ணன் ஆண்டாளுக்கு காட்சியளித்தான். ஆண்டாள் விரும்பிய வண்ணம் அவளைத் திருமணம் செய்து கொண்டான். எனவே ஆண்டாள் திருக் கல்யாண நாளாக போகிப்பண்டிகை இப்பொழுதும் பல வைணவ ஆலயங் களில் கொண்டாடப்படுகிறது.போகி அன்று நெருப்பில் போட்டு பொசுக்குஆண்டின் கடைசிநாள் என்பதால், நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள், தேவையற்ற பொருட்கள் (எண்ணங்கள்)அப்புறப் படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.பழந்துயரங்களை அழித்துப் போக்கும் பண்டிகை போகிப் பண்டிகை “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில” என்பதற்கேற்ப பழைய பொருள்களை எல்லாம் தீயிலிட்டு பொசுக்க வேண்டும். தீயில் போட்டால் எதுவும் மிச்சமிருக்காது அல்லவா. (அன்று டயர்கள் போன்றவற்றை எரித்து சுற்று சூழலை மாசு படுத்தக்கூடாது.) பொருள்கள் என்பது தீய எண்ணங்களையும், நடந்துபோன துயரமான நினவுகளையும் சேர்த்துதான். உறவுகள் மனக்கசப்பு நீங்கி ஒன்றாக வேண்டும். போக்கி என்ற சொல்லே நாளடைவில் மருவி ‘போகி’ என்றாகிவிட்டது.
போகிப்பண்டிகை எப்படிக் கொண்டாடுவது?
போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப்பொங்கல்’ வைக்கப்படும். வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும் பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டு களிக்க வேண்டும்.
சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகை மிகப்பழமையான பண்டிகை ஆகும். சங்க இலக் கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை முத லிய இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன. “தைஇத்திங்கள்
தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படு
வாயோ” என்று கலித்தொகை கூறுகிறது.
தை நீராடல்
உத்தராயண புண்ணிய காலத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவதும், திருக் கோயில்களில் வழிபாடு நடத்துவதும் பல்வேறு தான தர்மங்களைச் செய்வதும், காலம் காலமாகச் செய்யப்பட்டு வருகின்றது. சங்க இலக்கியங்களில் தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை ‘‘தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக் காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.
வாசலில் நெற்கதிர் தோரணம்
தை நீராட்டு முடிந்தவுடன், பொங்கல் பண்டிகை அன்று, அறுத்த நெற் கதிர்களை வீட்டுக்கு எடுத்து வருவர். அக் கதிர்களை பகவானுக்குப் படைத்து, வீட்டின் வாயில் நிலைப்படியின் மேல், பசுஞ்சாணம் கொண்டு ஒட்டி வைப்பர். அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, பூஜை செய்வர். அதைப்போலவே அதை அழகான வளையமாகக் கட்டி, தூக்குக் கூடு போல வீட்டில் தொங்க விடுவதும் உண்டு. இன்றும் கிராமத்துப் பழைய வீடுகளில் மரத்தூண்களின் மேல் நெல்மணிக் கதிர்களால் கட்டப்பட்ட பிரிமணை வளையங்களை பார்க்கலாம். அதிலே இருக்கிற தானியங்களை பறவைகள் சிட்டுக் குருவிகள் வந்து உண்டு மகிழும். அந்தப் பறவைகள் சத்தம் வீடுகளில் கேட்கும்பொழுது மங்களங்கள் பெருகும்.
சூரியனுக்கான திருவிழா
தைப்பொங்கல் பண்டிகை சூரியனுக்கான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. சூரியன் வேதகாலக் கடவுள். சூரியனின் பிறப்பு பற்றி பல குறிப்புகள் வேதங்களில் இருக்கின்றன. தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு சாவர்ணி மனு, சனீஸ்வரன், தபதி என குழந்தைகளும் உள்ளதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சந்தியா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன். பகவான் மன் நாராயணன் கண்ணிலிருந்து சூரியன் பிறந்தான் என்று ரிக் வேதம் சொல்லுகின்றது. (சஷூ ஸூர்யோ அஜாயதா-புருஷ சூக்தம்) வேதங்களால் போற்றப்படும் சூரிய பகவானுக்கு உரிய விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.
முப்பத்து முக்கோடி தேவர்களில் சூரியன்
முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு எப்படி வருகிறது என்பதற்குத் திருப்பாவையின் ஒரு பாசுரத்தில் விளக்கம் இருக்கிறது. ‘‘முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று கப்பம் தவிர்க்கும் கலியே” என்று இறைவனை அந்தப் பாசுரம் போற்றுகிறது. அதிலே 12 சூரியன்கள், 11 ருத்ரர்கள், 8 அஷ்டவசுக்கள், அஸ்வினி குமாரர்கள் 2 அல்லது இந்திரனையும் பிராஜபதியையும் சேர்த்தால் முப்பத்தி மூன்று ஆகிறது. ஆக மொத்தம் முப்பத்தி மூன்று தேவதைகளை, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று கணக்கிட்டு சொல்லுகின்றார்கள். இதில் விஷ்ணு புராணத்தின்படி 12 ஆதித்யர்கள் உள்ளனர். அவர்கள், அம்சன், ஆர்யமான், பாகன், துத்தி, மித்திரன், புஷன், சக்ரன், சாவித்திரன், துவச்த்திரன், வருணன், விஷ்ணு, விவஸ்வத் ஆகியோராகும். மற்ற புராணங்களில் யமன், வருணன், இந்திரன் போன்றோரும் ஆதித்யர்கள் என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் முதல் நாள் பண்டிகையில் இந்த ஆதித்யர்களுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.
The post தை பிறந்தால் வழி பிறக்கும் : தைத் திருநாள் appeared first on Dinakaran.