![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/29/36412628-thai-amavasai.webp)
ராமேஸ்வரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது. ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மஹாளய அமாவாசை நாட்களில் பல்லாயிரக்கான பக்தர்கள் இங்கு வருகை தந்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அவ்வகையில், இன்று தை அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
இதற்காக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நள்ளிரவு முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பக்தர்கள் வரத் தொடங்கினர். அதிகாலையில் அவர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மணற்பரப்பில் அமர்ந்து முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மீண்டும் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். தை அமாவாசையையொட்டி ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தை அமாவாசையை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 5 மணி முதல் 5.30 வரை ஸ்படிகலிங்க பூஜையும், அதனை தொடர்ந்து சாயரட்சை பூஜை வரையிலான காலபூஜைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் சகிதம் புறப்பாடாகி பகல் 12.10 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளினர். அங்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பகல் முழுவதிலும் கோவில் நடை திறந்திருந்தது. மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாரதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீ ராமர் வெள்ளி ரத புறப்பாடு வீதி உலா நடைபெறுகிறது.