தை அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்

1 day ago 1

ராமநாதபுரம், ஜன.30: ராமநாதபுரம் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் கடலில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்தும் வழிபட்டனர். கிராம கோயில்களில் சிறப்பு வழிபாடும் நடந்தது.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள், ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டிணம் நவபாஷன தீர்த்தம், திருப்புல்லாணி சேதுக்கரை, சாயல்குடி மாரியூர் கடல் ஆகிய தீர்த்தக் கடலில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட சடங்குகளை செய்து வழிபாடு செய்தனர். தமிழ் மாதங்களில் தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை தினத்தன்று கடலில் புனித தீர்த்தமாடி தர்ப்பனம் கொடுத்தல் மற்றும் விரதம் இருப்பதன் மூலம் மூதாதையர்களை வரவேற்பதாகவும், தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் அவர்களை விடை கொடுத்து அனுப்புவதாகவும் ஆன்மீக ரீதியான நம்பிக்கை உள்ளது.

எனவே தை அமாவாசை அன்று முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாளாக கருதப்படுவதால், இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுப்பது முக்கிய கடமையாக உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து புனித தீர்த்தமாடிய பிறகு ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்பிகை உடனுரை ராமநாதசுவாமியை வழிப்பட்டனர். இதுபோன்று தேவிப்பட்டிணம் கடற்கரையில் உள்ள நவபாஷன தீர்த்தம், ராமர் தீர்த்தம், அங்குள்ள கடலடைத்த பெருமாள் கோயில் மற்றும் திருப்புல்லாணி சேதுக்கரை கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபட்டனர். பிறகு அங்குள்ள சேதுக்கரை சேதுபந்தன ஜெயவீரஆஞ்சநேயர், திருப்புல்லானி பத்மாஷினி தாயார் உடனுறை ஆதிஜெகநாதபெருமாள் கோயில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

சாயல்குடி அருகே உள்ள மாரியூர் கடலில் நீராடி தர்ப்பணம் கொடுத்து, அங்குள்ள பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலில் தரிசனம் செய்தும், முன்னோர்களுக்கு மோட்ஷ தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்தனர். முக்கிய கடற்கரைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம்,சேதுக்கரை மற்றும் தேவிப்பட்டிணத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. மேலும் கிராமபுற கோயில்களில் அமாவாசை விஷேச பூஜைகள், வழிபாடு நடந்தது. திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் மற்றும் வராஹி அம்மன் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர், அபிராமம் அருகே உள்ள அ.தரைக்குடி புஷ்பனேஸ்வரி உடனுரை தரணீஸ்வரர் ஆகிய கோயில்களில் விஷேச பூஜைகள் நடந்தது.

இதுபோன்று ஏனாதி பூங்குளத்து மாடன், ஆப்பனூர் அரியநாயகி அம்மன், கடலாடி பாதாள காளியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன், சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், ராக்கச்சி அம்மன். காணிக்கூர் பாதாள காளியம்மன் ஆகிய கோயில்களில் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொண்டி அருகே உள்ள தீர்தான்டதானம் கடலில் நீராடி, முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் செய்தனர். பின்னர் இங்குள்ள சர்வ தீர்த்ததில் நீராடி சிவனை வழிபட்டனர். அதிகாலை முதல் ஏராளமானோர் வந்தனர்.

The post தை அமாவாசை சிறப்பு வழிபாடு கடலில் நீராடி தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article