சென்னை: திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான், திராவிட மாடல் அரசின் நிர்வாக தோல்வி காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள் என்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அரசு 2021 மே திங்கள் 7ம் நாள் பதவியேற்றது முதல் ஓய்வின்றி தொடர்ந்து விழிப்புடன் அனைத்து வகையிலும் செயல்பட்டு வருவதன் காரணமாக இந்தியாவில் சிறந்த மாநிலம், சிறந்த நிர்வாக அமைப்புள்ள மாநிலம், சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் என்றெல்லாம் ஒன்றிய அரசின் அமைப்புகளே பலமுறை பாராட்டியுள்ளதை சீமானுக்கே தெரியும்.
எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திராவிட மாடல் அரசின் நிர்வாகத்தை குறை கூறுவது ஏற்புடையதல்ல. மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு, தமிழ்நாடு முழுவதிலும், வடிகால்களும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும், தூர்வாரப்பட்டுள்ளன. பருவகாலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கனமழை பெய்வதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை களைவதற்காக மாவட்ட நிர்வாகமும் அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்படும் பகுதிகளில் உடனுக்குடன் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னை மாநகரில் மட்டுமல்லாமல், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு அங்கு வரும் தகவல்கள் அடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது வழக்கமாகும். பொதுமக்களிடம் தேவையற்ற வதந்திகளை பரப்பி, அதன் மூலம் வெற்று விளம்பரத்தை தேடுவதைவிட மக்களுடன் மக்களாக நின்று உதவி செய்வதே சிறந்த மக்கள் தொண்டாகும். அவசர காலங்களில் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட ஒத்துழைப்பு நல்கி உதவி செய்திட வேண்டியது அனைவருக்கும் கடமையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தேவையற்ற வதந்தி பரப்பி விளம்பரம் தேடுவதை விட மக்களுடன் மக்களாக நின்று உதவி செய்வதே சிறந்த மக்கள் தொண்டாகும்: சீமானுக்கு திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.