பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்தாலும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தேவை அதிகரித்துள்ளதால்,கூடுதல் விலைக்கு விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் வாழைத்தார் ஏலம் நடைபெறும். விற்பனைக்காக கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் தரத்திற்கேற்றார் போல்,விலை நிர்ணயம் செய்யப்பட்டு எடை மூலம் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாத துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் இருந்தாலும், உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வாழைத்தார் வரத்து அதிகமானது. தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பால்,வாழையின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால்,வாழைத்தார் விலை அதிகரித்து வருகிறது.
நேற்று நடந்த சந்தையின் போது, சுற்றுவட்டார பகுதியிலிருந்தே வாழைத்தார் வரத்து ஓரளவு இருந்துள்ளது. வாழைத்தார்களின் வரத்து அதிகமாக இருந்தாலும், இந்நேரத்தில் அதன் தேவை அதிகரிப்பால், தொடர்ந்து கூடுதல் விலைக்கு விற்பனையாகிறது.இதில், செவ்வாழை தார் ஒரு கிலோ ரூ.65 வரையிலும் (மொத்த விலை), பூவந்தார் ரூ.42க்கும்,மோரீஸ் ரூ.38க்கும்,கற்பூர வள்ளி ரூ.45க்கும்,ரஸ்தாளி ரூ.48க்கும், நேந்திரன் ரூ.40க்கும்,கேரள ரஸ்தாளி ஒரு கிலோ ரூ.45க்கும் என வழக்கம் போல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post தேவை அதிகரிப்பால் வாழைத்தார் விலை தொடர்ந்து உயர்வு appeared first on Dinakaran.