தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்

2 weeks ago 4

கமுதி: பரமக்குடியில் தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ பலியானார். அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கே.நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (36). இவர் பரமக்குடி நகர் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிந்து வந்தார். தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன.

பரமக்குடி நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் எஸ்ஐ சரவணன் தலைமைலான போலீசார் கடந்த 30ம் தேதி நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமக்குடி ரவி தியேட்டர் எதிரில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றியபோது அருகில் இருந்த மின்சார கம்பிகள் மீது கொடிக்கம்பம் உரசியதில் எஸ்ஐ சரவணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின் கே.நெடுங்குளம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு தமிழக சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, டிஐஜி அபினவ் குமார், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின் 21 குண்டுகள் முழங்க சரவணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சரவணனுக்கு மனைவி விஜயலட்சுமி, 4வயது மகன், ஒன்றரை வயதில் மகள் உள்ளனர்.

* விபத்தில் பெண் எஸ்.ஐ பலி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணவேணி (52). இவர், தீபவாளி அன்று அங்கலக்குறிச்சியில் இருந்து கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்கும் கிருஷ்ணவேணி ஓட்டிச்சென்ற மொபட்டும் எதிர்ப்பாராதவிதமாக மோதின. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணவேணியை அப்பகுதியினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

* எஸ்.ஐ.க்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த திருமதி கிருஷ்ணவேணி (51) சாலை விபத்திலும், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சரவணன் (36) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இருவரின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இருவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

The post தேவர் ஜெயந்தி கொடிக்கம்பங்களை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து எஸ்ஐ உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article