தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகளால் 1,000 பாக்கு மரங்கள் சேதம்

1 month ago 5

*விவசாயிகள் அதிர்ச்சி

கூடலூர் : தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகளால் 1,000 பாக்கு மரங்கள் சேதமான சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சி பகுதியில் மச்சிக்கொல்லி பேபி நகர் சுற்றுவட்டார பகுதியில் விவசாய நிலங்களுக்குள் இரவு நேரத்தில் வரும் காட்டு யானைகள் ஏராளமான பாக்கு மரங்களை உடைத்து சேதப்படுத்தி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் இப்பகுதிகளில் நடமாடும் காட்டு யானைகள் ஆயிரத்திற்கும் அதிகமான பாக்கு மரங்களை சேதப்படுத்தி உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வரும் 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தொடர்ச்சியாக பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் பாவா என்கிற மொய்தீன் குட்டி மற்றும் அம்மினி மேத்யூ உள்ளிட்ட விவசாயிகளின் விவசாய நிலங்களில் ஏராளமான பாக்கு மரங்கள் யானைகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

விவசாய நிலங்களுக்குள் வரும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வன எல்லையில் அகழி அமைத்து, யானைகள் அகழிகளை தூர்த்து உள்ளே வராத வண்ணம் சூரிய ஒளி மின்வேலி அமைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். கிராம மக்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் போஸ்பாரா முதல் செம்பக்கொல்லி வரை அகழி அமைத்து தர உறுதி அளித்திருந்தனர்.

மேலும் காட்டு யானைகளை கண்காணித்து விரட்ட வனத்துறை குழுவினரும் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும் இதுவரை அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது மீண்டும் காட்டு யானைகள் கிராமப்பகுதிக்குள் வர துவங்கி உள்ளன. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை அடர்வன பகுதிக்குள் விரட்டவும் வன எல்லையில் அகழி அமைத்து பாதுகாப்பு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தேவர் சோலை பேரூராட்சி பகுதியில் காட்டு யானைகளால் 1,000 பாக்கு மரங்கள் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article