தேவகோட்டை: தேவகோட்டை அருகே, கண்டதேவியில் நாளை தேரோட்டம் நடைபெறும் நிலையில், நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் இந்தாண்டுக்கான ஆனி திருவிழா கடந்த 30ம் தேதி கொடிமரம் ஏற்றி காப்பு கட்டப்பட்டது. தினமும் ஒவ்வொரு நாட்டார்களின் மண்டகப்படி நடைபெற்று வருகிறது. தேரோட்டம் கடந்தமுறை எப்படி நடைபெற்றதோ அதன்படியே இந்த வருடமும் நடைபெற வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை கலெக்டர் பொற்கொடியின் நேரடி கண்காணிப்பில், வருவாய்த்துறையினர் விழா பணிகள் கண்காணித்து வருகின்றனர். எஸ்.பி சந்தீஷ் கண்காணிப்பில் கண்டதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கோயிலின் முகப்பில் பாதுகாப்பு கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா பதிவுகளை கண்காணித்து வருகின்றனர். தேர் வடம் பிடிக்க நாட்டார்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே தேரின் வடக்கயிறு இழுக்கும் பகுதிக்குள் செல்ல முடியும்.
பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் வடம் இழுக்கும் பகுதியை கடந்து அமைக்கப்பட்ட தடுப்புகளின் உள்பக்கம் இருந்து தேரோட்டத்தை காணலாம். கண்டதேவி தேரோட்டத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் எவரும் அனுமதிக்க படமாட்டார்கள். நாளை தேரோட்டம் நடைபெறும் நிலையில், தேரில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடந்தது. தேர், கோயில் மற்றும் நான்கு ரத வீதியை சுற்றிலும் சோதனை முழுமையாக நடைபெற்றது.
The post தேவகோட்டை அருகே கண்டதேவியில் நாளை தேரோட்டம்: போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை appeared first on Dinakaran.