சென்னை: தமிழ்நாடு முழுவதும் சாலை மற்றும் மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மொத்தம் 3,268 கி.மீ. நீளத்திற்கு சாலை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 14 புறவழிச்சாலைகள் அமைப்பதற்காக ரூ.1,713 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆற்றுப்பாலம் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர், ஓசூரில் புறவழிச்சாலை அமைக்க ரூ.500 கோடி, ஆறுகளின் குறுக்கே 6 உயர்மட்ட சாலை அமைக்க ரூ.295 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவையில் ரூ.348 கோடியில் 12.5 கி.மீ. புறவழிச்சாலை, நெல்லையில் ரூ.225 கோடியில் 12.4 கி.மீ. புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. விருத்தாசலம் – தொழுதூர், கொடை-வத்தலகுண்டு, சிவகாசி-விருதுநகர் சாலைகள் 4 வழிச்சாலைகளாக மேம்படுத்தப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.