
மராட்டிய மாநிலம், சாங்கிலி மாவட்டம், அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கராஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தோண்டிராம் போசலே (45 வயது). இவர் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தான் பெற்ற பிள்ளைகளிடம் படிப்பு விஷயத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொள்ளும் தந்தையாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு படிக்கும் அவரது 16 வயது மகள் சமீபத்தில் நடைபெற்ற தேர்வு ஒன்றில் மிக குறைவாக மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இது தோண்டிராம் போசலேவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கடந்த சனிக்கிழமை இரவு தனது மகளிடம் அவர் கேட்டு திட்டி உள்ளார். அப்போது சிறுமி எதிர்த்து பேசியுள்ளார். இதனால் மாணவிக்கும், தந்தைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் தலைக்கேறிய தோண்டிராம் போசலே வீட்டில் இருந்த ஆட்டுக்கல் குழவியின் மரக்கைப்பிடியை எடுத்து மகள் என்றும் பாராமல் 16 வயது சிறுமியை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளார். இதை சிறுமியின் தாய் மற்றும் சகோதரன் தடுக்க முயன்றனர். இருப்பினும் அவரது தாக்குதல் தொடர்ந்தது.
ஒரு கட்டத்தில் வலிதாங்க முடியாமல் சிறுமி மயங்கி சரிந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு சாங்கிலியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் தோண்டிராம் போசலேவை கைது செய்தனர். தேர்வில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.