
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைவாய்ந்த திருச்செந்தூர் கோவில் குறித்து சங்க இலக்கியங்களில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. திருச்சீரலைவாய் செந்தில்மாநகரம், ஜெயந்திபுரம், சிந்துபுரம் என்று இலக்கியங்களில் பாடப்பட்டு உள்ளது.
பிற்கால பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில் திருப்புவன மகாதேவி சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுபடை, அருணகிரிநாதரின் திருப்புகழ், குமரகுருபர சுவாமிகளின் கந்தர் கலிவெண்பா போன்றவற்றிலும் பாடப்பட்டு உள்ளது. ஆதிசங்கரரின் தீராத வயிற்றுவலி நீங்கியதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய புஜங்கம் பாடியுள்ளார்.