டெல்லி: தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ. தேர்வின் மதிப்பெண்களையே பணிமூப்பு அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என எஸ்ஐ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆர்.ரஞ்சித்சிங் என்பவரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 1995லிருந்து எஸ்ஐ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் புதிய பணிமூப்பு பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. பணி மூப்பு பட்டியல் அடிப்படையில் என்னென்ன பதவி உயர்வு கிடைத்திருக்கும் என்பதை மதிப்பிட வேண்டும் என்றும், புதிய மதிப்பீட்டின்படி பதவி உயர்வு பெற்றதாக கருதி, பணிமூப்பை நிர்ணயித்து பலன்களை வழங்கவும் ஆணையிட்டுள்ளது. புதிய மதிப்பீட்டின்படி பதவி உயர்வு பெற்றதாக கருதப்படுபவர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பால் பதவி குறைப்புக் கூடாது: உச்ச நீதிமன்றம்
சீருடைப் பணியாளர் தேர்வாணைய எஸ்.ஐ. தேர்வு மதிப்பெண் மூலமே பணிமூப்பு நிர்ணயிக்கவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே பதவி உயர்வு பெற்றவர்களை பதவிக்குறைப்பு செய்யக் கூடாது என்று ஆணையிடப்பட்டுள்ளது. இனி தேர்வு மதிப்பெண் மூலமே பணிமூப்பை நிர்ணயித்து பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இனி 6,000 பதவிகளில் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்.ஐ. பணிமூப்பு வழக்கு விவரம்
எஸ்.ஐ. பதவிக்கு நேரடி தேர்வு மூலம் பணியிலுள்ள காவலர்களில் இருந்தும் தேர்வு மூலமும் நியமனம் செய்யப்படுகிறது. மொத்த இடங்களில் 20% காவல் துறையில் பணியில் உள்ள காவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேர்வு மூலம் பணிமூப்பை நிர்ணயம் செய்யும்போது காவலர்களுக்கு முன்னுரிமை அளித்தது அரசு. நேரடி தேர்வர்களை விட, காவலர்கள் பணிமூப்பில் அதிகம் இருக்கும் வகையில் கொள்கை மாற்றம் செய்யப்பட்டது. புதிய மாற்றத்தால் 69% மதிப்பெண் பெற்ற காவலர், நேரடி தேர்வில் 79% பெற்ற ரஞ்சித் சிங்கை பின்னுக்கு தள்ளினார். பணிமூப்பில் பின்னுக்குத் தள்ளப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் ரஞ்சித் சிங் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டில் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் ரஞ்சித் சிங் மேல்முறையீடு செய்தார்.
The post தேர்வாணையம் நடத்திய எஸ்.ஐ. தேர்வின் மதிப்பெண்களையே பணிமூப்பு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.