தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது வழக்கு

3 hours ago 2

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாகவும் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி மீது ஏற்கனவே 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு முனிசிபல் சத்திரம் பகுதியில், வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியினர் பிரசார கூட்டத்துக்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன், நாம் தமிழர் கட்சியினரிடம் அறிவுறுத்தியும், தொடர்ந்து அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் அவர், இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட கட்சியினர் 7 பேர் மீது, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், தேர்தல் விதிகளை மீறியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Read Entire Article