'தேர்தல் வந்துவிட்டால் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும்'- சீமான்

5 hours ago 2

மதுரை,

மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மகாலில், நாம் தமிழர் கட்சியின் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கச்சத்தீவு மீட்பு விவகாரம் தற்போது பேசும்பொருளாக மாறி இருக்கிறது. இந்த விவகாரத்தை, நாங்கள் வித்தியாசமாக பார்க்கிறோம். அதாவது, கொள்ளையடிப்பது, திருடுவது போன்ற குற்றங்கள் செய்யும் ஒருவன், கோவில் திருவிழா வந்தவுடன் காப்புக்கட்டி ஒரு வாரம் விரதம் இருப்பான். அதன்பின்னர் திடீரென அவன் சாமியும் ஆடுவான்.

அந்த சமயத்தில் அவன் செய்த குற்ற செயல்களை எல்லாம் புனிதப்படுத்திக் கொள்வான். அதுபோலத்தான் இந்த கச்சத்தீவு மீட்பு குறித்த பேச்சும் உள்ளது. அது கோவில் திருவிழா, இது தேர்தல் திருவிழா. தேர்தல் வந்துவிட்டால், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. போன்ற கட்சிகளுக்கு திடீரென கச்சத்தீவு மீது காதல் வந்துவிடும்" இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article