தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்கள் கடந்தும் டெல்லி முதல்வர் தேர்வில் இழுபறி: புதிய அரசு அமைக்க முடியாததால் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

2 months ago 8

புதுடெல்லி: டெல்லி தேர்தல் முடிவு வெளிவந்து 10 நாட்கள் கடந்தும் புதிய முதல்வரை பா.ஜவால் தேர்வு செய்து ஆட்சி அமைக்க முடியாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், 48 இடங்களில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு, பாஜ ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 22 தொகுதிகளை கைப்பற்றி தோல்வி அடைந்தது. காங்கிரஸ், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இன்னும் முதல்வர் யார் என்று பாஜ அறிவிக்கவில்லை. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் அந்த கட்சி கூட்டவில்லை. இதனால் டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றும் பா.ஜ புதிய ஆட்சியை உடனே அமைக்க முடியவில்லை. முதலில் பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து வந்தவுடன் எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி சனிக்கிழமை அதிகாலை வந்து விட்டார். ஞாயிற்றுக்கிழமை நடக்க இருப்பதாக ெதரிவிக்கப்பட்ட பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று தள்ளிவைக்கப்பட்டும், அதுவும் நடக்கவில்லை. பா.ஜவில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து புதிய ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ தேசிய தலைவர் நட்டா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதன் அடிப்படையில் பா.ஜ எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை நடக்கும் என்றும், அதில் டெல்லி புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்றும், அதன் அடிப்படையில் பிப்.20ல் ராம்லீலா மைதானத்தில் டெல்லி புதிய முதல்வர் பதவி ஏற்பார் என்றும் பா.ஜ வட்டாரங்கள் தெரிவித்தன.

* 48 எம்எல்ஏக்களையும் மோடி நம்பவில்லை: அடிசி கடும் தாக்கு
பதவி விலகும் டெல்லி முதல்வர் அடிசி கூறும்போது,’ டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 10 நாட்கள் ஆகின்றன. கடந்த 9ம் தேதி முதல்வரையும், அமைச்சர்களையும் பாஜ அறிவித்து ஆட்சியமைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அப்படி ஒரு நிகழ்வு தற்போது வரை நடைபெறவில்லை. டெல்லியை ஆட்சி செய்ய பாஜவில் யாரும் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜ எம்எல்ஏக்களில் ஒருவரை கூட பிரதமர் மோடி நம்பவில்லை. அந்த கட்சிக்கு நிர்வாகத்திற்கான எந்த தொலைநோக்குப் பார்வையோ அல்லது திட்டமோ இல்லை. மக்களைக் கொள்ளையடிக்கத்தான் அந்த கட்சிக்கு தெரியும். அரசாங்கத்தை நடத்தும் திறன் அவர்களிடம் இல்லை. இப்படி தகுதியற்று இருந்தால் அவர்கள் எப்படி மக்களுக்காக வேலை செய்வார்கள்?.
இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்கள் கடந்தும் டெல்லி முதல்வர் தேர்வில் இழுபறி: புதிய அரசு அமைக்க முடியாததால் பிரதமர் மோடி அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article