வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைத்து, அதன்அடிப்படையில் தேர்தல் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளின் கோரிக்கை. அதற்கான முன்னெடுப்பு நடந்தது. ஆனால் தேர்தல் நடைமுறைகள் அப்படி நடக்கவில்லை. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு, அங்கு வாக்களிக்கும் வயது வந்தவர்களை விட அதிக வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்று இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. கிட்டத்தட்ட 39 லட்சம் வாக்காளர்கள் மகாராஷ்டிரா வாக்காளர்கள் பட்டியலில் அதிகமாக இடம் பெற்றுள்ளதாகவும், 2024 மக்களவை தேர்தல் முடிந்து அடுத்த 5 மாதத்திற்குள் இவ்வளவு எண்ணிக்கை வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்த புகாருக்கு இன்று வரை தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை.
அதே போல ஒரே வாக்காளர் எண் பல்வேறு மாநிலங்களில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், அதன் மூலம் வாக்குப்பதிவில் மோசடி நடந்து இருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. பா.ஜவும், தேர்தல் ஆணையமும் இதுபோன்று முறைகேடு செய்து, அடுத்த ஆண்டு மேற்குவங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜவை வெற்றி பெற வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்து இருந்தார். ஆனால் வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்கள் இருந்தாலும் தொகுதி மற்றும் வாக்கு சாவடி வேறுபட்டிருக்கும் என்பதால் முறைகேடு செய்ய முடியாது என்று கூறி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதை அரசியல் கட்சிகள் ஏற்கவில்லை. நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்னை பெரிதாக வெடித்தது.
இந்தசூழலில் தேர்தல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த யோசனைகளை தெரிவிக்கலாம் என்று அரசியல் கட்சிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த ஆலோசனை கூட்டம் அங்குள்ள தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 18 வயது எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, இறந்தவர்கள் பெயர்களை நீக்காமல் இருப்பது உள்ளிட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள், வாக்குச்சாவடிகள் அமைவிடம் தொடர்பான ஆட்சேபனைகள், தேர்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.குறிப்பாக அனைவரது ஆதார் கார்ட்டையும் வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க வேண்டும்.
4 கோடி மேற்பட்டவர்கள் மட்டுமே ஆதார் கார்டை லிங்க் செய்துள்ளார்கள். மீதமுள்ள 2 கோடி பேர் ஆதார் கார்டை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் கட்சிகள் சார்பில் முன்வைக்கப்பட்டன. இன்றைய நவீன தொழில் நுட்பத்தில் மிக எளிதாக போலி வாக்காளர்கள் இல்லாமல் புதிய பட்டியலை உடனேயே தயாரித்து விட முடியும். அத்தனை வசதிகள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்கும் போது, கரு விழி அடிப்படையில், கைரேகை அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெறும் போது 100 சதவீதம் துல்லியமான வாக்குப்பதிவு நடைபெறும். 145 கோடிக்கு மேல் உள்ள இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இது கண்டிப்பாக அவசியம். அப்போதுதான் நமது நாட்டின் தேர்தல் நடைமுறைகள் மீது அனைவருக்கும் நம்பிக்கை பிறக்கும். அனைத்து நவீன வசதிகளையும் அறிமுகப்படுத்தி, அதை எல்லாம் நடைமுறைப்படுத்தும் போதுதான் வாக்காளர்களுக்கும் தேர்தல் ஜனநாயகத்தின் மீது பற்று ஏற்பட்டு 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வழி உருவாகும்.
The post தேர்தல் சீர்திருத்தம் appeared first on Dinakaran.