தேர்தல் கூட்டணி குழப்பங்களால் குடும்பத்துடன் புதுவீட்டில் குடியேறிய மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2 weeks ago 4

‘‘சேலத்துக்காரர் அணிக்கு நிர்வாகிகள் தாவுவதால் தேனிக்காரருக்கு நெருக்கடி கொடுக்கிறாராமே மாஜி அமைச்சர் ஒருவர்..’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘தேனிக்காரர் அணியில் நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் வைத்தியானவர் இருந்து வருகிறார். தேனிக்காரரால் எந்த பலனும் இனி இருக்காது என தெரிந்துகொண்ட டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக சேலத்துக்காரர் அணிக்கு தாவ தொடங்கி இருக்காங்களாம்.. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மீதி உள்ள நிர்வாகிகளும் செல்ல முடிவு செய்திருக்காங்களாம்..

எனவே, இது சம்பந்தமாக விரைவில் ஏதாவது ஒரு நல்ல முடிவை எடுக்கும்படி தேனிக்காரருக்கு வைத்தியானவர் நெருக்கடி கொடுத்து வருகிறாராம்.. ஆனால் தேனிக்காரர் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்து வருகிறாராம்.. இப்படி அமைதியாகவே இருந்தால், மீதி உள்ள நிர்வாகிகளும் சென்று விடுவாங்க.. தேர்தல் நெருங்குவதால் வேறுவிதமான முடிவையும் நிர்வாகிகள் எடுத்து விடுவாங்க என தேனிக்காரரிடம் வைத்தியானவர் தொடர்ந்து பேசியிருக்காரு.. இது அனைத்தையும் கேட்டுக் கொண்ட தேனிக்காரர், கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள் என கூறியுள்ளாராம்..

இதனால் மாஜி அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நில அளவை துறையில் கறாராக தொகையை கறந்து வரும் ஒரு அதிகாரி மீது பக்கம் பக்கமாக துறை ஊழியர்கள் புகார் மனு அனுப்பி இருக்காங்களாமே தெரியுமா..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாவட்டத்துல நில அளவை துறையில் பணியாற்றும் உயர்அதிகாரி ஒருத்தர் மீது அந்த துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அடுக்கடுக்கான புகார்களை கொட்டி தீர்த்து புகார் மனுக்களை தட்டி விட்டு இருக்கிறாங்களாம்.. 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலையில் சேர்ந்த அந்த அதிகாரி பணியில் சேர்ந்த 3 மாதத்தில் இருந்தே கல்லா கட்டுவதற்கான வேலைகளை தொடங்கிட்டாராம்..

மாவட்டத்தில் புதிதாக லேஅவுட் போடப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி குறைகளுக்கு ஏற்ப தொகையை கறந்துவிடுவாராம்.. தன்னோட தில்லுமுல்லு வேலைகளுக்கு ஒத்துழைக்காத தனக்கு கீழ் உள்ள அதிகாாிகளை டார்ச்சர் செய்து தன்னோட வழிக்கு கொண்டு வந்துவிடுவாராம்.. சமீபத்தில ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து இவருக்கு பரிசாக விலை உயர்ந்த கம்ப்யூட்டர், டேப் கிடைத்திருக்காம்.. தன்னோட தில்லாலங்கடி வேலைகளை கண்டுக்காம இருப்பதற்கு வருவாயை கவனிக்கும் அதிகாரி ஒருவருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடு பரிசாக கொடுத்து அசத்தி இருக்கிறார்..

அதேபோல கள ஆய்வு என்கிற பெயர்ல ஒவ்வொரு வட்டத்திற்கும் சென்று குறைகளை கண்டுபிடித்து பணத்தை வசூல் செய்துவிடுதாகவும், மாதந்தோறும் சமர்ப்பிக்கப்படும் நாட்குறிப்பிற்கு உடனே ஒப்புதல் கிடைக்க ஒவ்வொரு அளவையாளர், சார் ஆய்வாளர்களிடமும் குறிப்பிட்ட தொகையை கறந்துவிடுவாராம்.. இதேபோல, பெண் ஊழியர்களை மிகவும் மோசமாக திட்டுகிறாராம்.. இப்படி 5 பக்கத்திற்கு புகார் மனுவை துறை ஊழியர்கள் அரசுக்கு அனுப்பி இருக்கிறாங்களாம்.. இதுதொடர்பாக இப்போது ரகசியமாக விசாரணை நடந்துகிட்டு வருகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறை சாலையில் ஆய்வுக்குப்போன நீதிபதியிடம் அடுக்கடுக்கான புகார் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலையில், சில கைதிகளுக்கு ராஜ உபசரிப்பு கிடைக்கிறதாம்.. குறிப்பாக சமீபத்தில குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட ஜெயமான நபர், செல்போனும் கையுமாக உலா வருகிறாராம்.. மற்ற கைதிகளிடம் காட்டும் கெடுபிடியை சிறை காக்கிகள், அவர் மீது காட்டுவது இல்லையாம்.. இதற்கெல்லாம் கரன்சி தான் காரணமா இருக்குமோ என்று பேசிக்கிறாங்க.. அது மட்டுமில்லையாம்..

மனு போட்டு கைதிகளை பார்க்க வருபவர்களிடம் சிலர் வசூல் ராஜாக்களாகவும் மாறி விடுகிறார்கள் என்கிறாங்க.. சமீபத்தில இந்த சிறைச்சாலைக்கு ஆய்வுக்கு போன நீதியரசர்களிடம் கைதிகள் புகார்களை அடுக்கினார்களாம்.. குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு கைதிக்கு ரூ.130 வரை, அரசாங்கம் கொடுக்குது.. ஆனால் அதற்கேற்ப தரம் உணவில் இல்லையாம்.. இப்படி சாப்பாடு கோல்மால் தொடங்கி பல குறைகளை சொல்லி இருக்காங்க.. இதனால விரைவில் சிறையில் பெரிய அளவில் மாற்றம் வரும் என்று சொல்றாங்க.. விசாரிக்க வேண்டியவங்க உண்மை தன்மையை விசாரிச்சு நடவடிக்கை எடுத்தா நல்லதுனு சிறைவாசிகள் சிலர் உறவினர்களிடம் புலம்பி இருக்காங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்தல் கூட்டணி குழப்பங்களால் குடும்பத்துடன் புதுவீட்டில் குடியேறி இருக்கிறாராமே அமைச்சர் எங்கேயாம்..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரி அரசியல் பிரபலங்களில் ஒருவரான தாமரையை சார்ந்த சிவாயமானவர் வி.மணவெளியில் வசித்தாராம்.. தொகுதி மாறி தேர்தலில் வென்றாலும் பூர்வீக வீட்டிலேயே தொண்டர்கள், ஆதரவாளர்களின் சந்திப்புகளை தொடர்ந்தாராம்.. இதனால் எப்போதும் அப்பகுதியே விழாக்கோலம் காணுமாம்.. கடந்த தேர்தலில் பட்டு தொகுதியில் போட்டியிட்டு பட்டம் பெற்றாராம்..

இதனால் தொகுதி மக்கள் அவரை சந்திப்பதில் சிரமம் நிலவியதாம்.. இது ஒருபுறமிருக்க, வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி மாற்றமும் நிகழ வாய்ப்புள்ளதால் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட சிவாயமானவர் முடிவெடுத்து விட்டாராம்.. இதனால் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனது இருப்பையே அங்கு மாற்ற முடிவெடுத்து புதுவீடு கட்டி குடும்பத்துடன் குடியேறி இருக்கிறாராம்.. தேர்தல் நெருங்கியதும் சிவாயமானவருக்கு புதுபாசம் பிறந்திருப்பதால் பூர்வீக இல்லமோ ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறதாம்.. அமைச்சரானவரின் இத்தகைய மனமாற்றம் இரு தொகுதி மக்களிடையே பேசு பொருளாகி உள்ளதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post தேர்தல் கூட்டணி குழப்பங்களால் குடும்பத்துடன் புதுவீட்டில் குடியேறிய மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article