தேர்தல் குறித்து தவறான தகவலை அளிப்பதா? மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப ஒன்றிய அரசு திட்டம்

2 hours ago 3

புதுடெல்லி: தேர்தல் குறித்து தவறான தகவல் அளித்துள்ள மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க். இவர், ஜோ ரோகனின் போட்காஸ்டில் சமீபத்தில் பேசும்போது, ‘கடந்தாண்டு தேர்தல்களின் ஆண்டாக இருந்தது. அப்போது, இந்தியா உள்பட உலகம் முழுவதும் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்துக்கு, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் ‘எக்ஸ்’ வலைதள பதிவில், ‘2024 தேர்தல்களில், இந்தியா உட்பட பெரும்பாலான அரசுகள் கொரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் தோல்வியடைந்தன என்ற ஜுக்கர்பெர்க்கின் கருத்து உண்மையில் தவறானது. 80 கோடி பேருக்கு இலவச உணவு, இலவச தடுப்பூசிகள் மற்றும் கொரோனா காலத்தில் உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு உதவி, வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியாவை வழிநடத்துவது வரை, பிரதமர் மோடியின் 3வது பதவிக்கால வெற்றி, நல்லாட்சி மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு ஒரு சான்றாகும்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பாஜ எம்.பியும், நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தலைவருமான நிஷிகாந்த் துபே, தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘தவறான தகவலை தெரிவித்தமைக்காக எனது குழு, மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப உள்ளது. எந்த ஒரு ஜனநாயக நாட்டை பற்றிய தவறான தகவலும் அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இந்த தவறுக்காக மெட்டா நிறுவனம், இந்திய நாடாளுமன்றத்திடமும் இங்குள்ள மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post தேர்தல் குறித்து தவறான தகவலை அளிப்பதா? மெட்டா நிறுவனத்துக்கு சம்மன் அனுப்ப ஒன்றிய அரசு திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article